திருவள்ளுவர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரான தி.விசுவஇராஜாசெந்தில்குமார் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் வள்ளுவர் சமூகத்தின் தனித்தன்மையைக் களங்கப்படுத்தாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அந்த அறிக்கையில்,
கடந்த சில நாட்களாக அய்யன் திருவள்ளுவர் வழிவந்த வள்ளுவர் இனமக்களைக் குறிவைத்து வலை தளங்களிலும் சுவரெழுத்து விளம்பரங்களிலும் பல்வேறு தவறான செய்திகள் உலா வருகின்றன. குறிப்பாக அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு சிலர் கூட பட்டியல் இனப்பிரிவில் இருக்கின்ற பெரும்பான்மை சாதியுடன், வள்ளுவர் இனத்தையும் ஒன்றிணைத்து ஆதி திராவிடர் என்று ஒரே பெயரில் குறிப்பிட வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைக்கின்றனர்.
இதை மேஏலோட்டமாகப் பார்த்தால் நியாயமான கோரிக்கை என்பது போல் தெரிந்தாலும், அது உண்மையில்லை. இவ்வாறு இணைப்பதின் மூலம் வள்ளுவர் குல மக்களின் வாழ்க்கையில், அவர்களின் இருளை நீக்கி ஒளியை ஏற்றுகிற வாய்ப்பு எந்த இடத்திலிருந்து தொடங்குகிறது என்பதையும் அவர்களே தெளிவுபடுத்த வேண்டுமென்று அன்புடன் கேட்டு கொள்கிறேன். ஏனெனில், எந்த அரசியல் கட்சியின் அதிகார மையத்திலும் மற்று சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வள்ளுவர் சமூகத்தினருக்கு என்று இதுவரையில் எந்தக் கட்சியிலும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படாத நிலையில், எவ்வாறு வள்ளுவர் சமூக மக்கள், ஒரு குடையின் கீழ் ஒன்றிணைவார்கள்? என்கிற கேள்வி இங்கே வலுவாக எழுகிறது.
மேலும் வள்லுவர் சமூக மக்கள் ஒரு காலத்தில் மேலோங்கிய நிலையில் இருந்தவர்கள். தமிழர்களின் வைதீகத்தையும் சோதிடத்தையும் கையாண்டவர்கள். அரசர்களுக்கு ஆலோசனை சொல்லும் நிலையில் இருந்தவர்கள். இதையெல்லாம் எவரும் உணர்ந்து வள்ளுவர் சமூகத்திற்கு சமூகத்தில் உரிய மதிப்பையும் பங்களிப்பையும் தராத நிலையையும் அம்மக்கள் உணர்ந்து மனம் நொந்த நிலையிலேயே வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
ஆகவே, தனியாக வாழ்ந்தாலும் தனித்துவமாக வாழ்கிற பெரும்பாலான வள்ளுவர் சமூக மக்களின் மனதைப் பிறர் காயப்படுத்தாமலும் அவர்களது பண்பாட்டை களங்கபடுத்தாமலும் இருக்க வேண்டுமென்று மிகுந்த தோழமை உணர்வோடு கேட்டுக்கொள்கிறோம். அவ்வப்போது எழுகிற வள்ளுவர் இன மக்களின் கோரிக்கைகளை முடிந்தவரையில் அரசுடன் பேசி ஒவ்வொன்றாக வென்றெடுக்கும் முயற்சியில் திருவள்ளுவர் மக்கள் கட்சி தொடர்ந்து ஈடு பட்டுவருகிறது என்பதையும் இந்த நேரத்தில் அனைவருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.
தமிழ் நாட்டில் இயங்குகின்ற பல்வேறு வள்ளுவர்குல சங்கங்கங்களின் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படவேண்டிய நேரம் இது என்பதையும், சகோதர உணர்வோடு அவர்களுக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். திருவள்ளுவர் மக்கள் கட்சி சமூக நல்லிணக்கத்துக்கான இயக்கமாக இயங்கி வருவதால் பொறுப்புணர்வோடு கவனமாகத்தான் இந்த வேண்டுகோள் அறிக்கையை வெளியிடுகிறது என தெரிவித்துள்ளார்.