விழுப்புரம் ஆர்.பி. நகரைச் சேர்ந்தவர்கள் ஜெயபால் - ஆனந்தி தம்பதி. கடந்த 2 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் பார்ப்பான் குளத்தின் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்ற ஆனந்தி, இரண்டு நாட்கள் தங்கிவிட்டு நேற்று (24.08.2021) காலை வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆனந்தி, உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன.
மேலும், வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 9 பவுன் நகை, ஒன்றரை லட்சம் பணம், 2 வெள்ளி விளக்குகள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆனந்தி கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இரண்டு நாட்களாக வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், இரவு நேரத்தில் கதவை உடைத்து, வீட்டுக்குள்ளே புகுந்து, நகை பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீசார், கொள்ளையர்களைத் தீவிரமாக தேடிவருகிறார்கள். விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்களை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்துள்ள நிலையில், மீண்டும் நேற்று முன்தினம் இரவு விழுப்புரத்தில் நடந்துள்ள கொள்ளை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.