!["These are the people who have ruined the faith in the vaccine" - sellur Raju interview](http://image.nakkheeran.in/cdn/farfuture/WnnvPnf76qg7StEFz48hqaWP1lpu84Z0RV5zy_vV_ko/1625319125/sites/default/files/inline-images/sellur-raju_6.jpg)
சமீபகாலமாக சசிகலா தொடர்ந்து கட்சியின் தொண்டர்களிடம் தொலைபேசி மூலம் பேசி வருவது அதிகம் பேசும் பொருளாக மாறியுள்ளது. சசிகலா தொடர்ந்து அதிமுகவை மீட்போம், மீண்டும் அரசியலுக்கு வருவேன், எம்.ஜி.ஆர் பற்றி பேசியது என பலவற்றை கட்சியின் தொண்டர்களிடையே பேசியது சமூக வலைதளங்களில் பரவலாக பரவியது. இது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது, “எம்.ஜி.ஆர். இல்லாத நிலையில் அவரைப்பற்றி சசிகலா பேசிக் கொண்டிருக்கிறார். அது அவருடைய தனிப்பட்ட கருத்து, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் மக்களை சந்திக்கலாம்.
சசிகலா கட்சியினருடன் பேசி வருவது மக்களுடைய விருப்பம். அதிமுகவின் நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதா தான். அதிமுகவில் பொதுச்செயலாளர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றால் பொதுக்குழு கூடி முடுவு எடுக்கப்படும். மதுரையில் அமைச்சர் தன்னுடைய தொகுதியில் மட்டுமே அதிக எண்ணிக்கையில் கரோனோ தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறார். தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் பின்தங்கி உள்ளது. தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தங்களது ஆட்சியின் போது தடுப்பூசி மீதான நம்பிக்கையை கெடுத்தவர்கள் தற்போதையை ஆளும் கட்சியினர்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரை குறை கூறுவதை தவிர்த்துவிட்டு முதல்வர் கொடுத்துள்ள அமைச்சர் பணியை மருத்துவ துறை அமைச்சர் செம்மையாக செய்ய வேண்டும். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்வதால் மக்கள் மனதில் நிலைத்திருக்க முடியாது. வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்களை கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. உணவு துறை அமைச்சர் சிறப்பாக செயல்படுவார், அவர் அனுபவம் வாய்ந்த அமைச்சர் விரைவில் ரேஷன் கடைகளில் கரோனோ நிவாரண பொருட்கள் வழங்கும் பணியினை முடிக்க உணவு துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.