உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைக் கடந்த சில மாதங்களாக தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்துவருகிறது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தங்களின் ஆரம்பகட்டப் பிரச்சாரத்தை சில மாதங்களாக செய்துவருகிறார்கள். குறிப்பாக பிரதமர் மோடி பலமுறை உ.பி சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவருகிறார். முக்கியமாக அம்மாநில முதல்வரோடு கருத்து வேறுபாடுகள் இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் அதையெல்லாம் தாண்டி இருவரும் இணைந்து தேர்தலுக்குத் தயாராகிவருகிறார்கள். காங்கிரஸ் தரப்பில் பிரியங்கா காந்தி தேர்தல் முன்னெடுப்புகளை செய்துவருகிறார்.
தேர்தல் பரபரப்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் இருந்து வரும் நிலையில், தற்போது பரவி வரும் ஒமிக்ரான் தொற்று தேர்தல் நடத்துவதற்கு ஒரு தடையாக வருமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தேர்தலை இந்த 5 மாநிலங்களிலும் தள்ளிவைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சில அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள், "இந்தக் குறிப்பிட்ட மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் இருப்பதால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை, தேர்தலைத் திட்டமிட்டபடி நடத்த ஆணையம் முயன்றுவருகிறது" என்று கூறியுள்ளார்கள்.