குடிப்பழக்கத்தால் தினந்தோறும் என்னென்ன விபரீதங்கள் நடக்கின்றன தெரியுமா? விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன.
சம்பவம் 1
ராஜபாளையத்தைச் சேர்ந்த முத்துக்குமார் பழைய பேருந்து நிலையத்தின் பின்புறமாக உள்ள பெட்டிக்கடை முன்பாக நின்றபோது, அங்கு வந்த மாரிச்செல்வம் என்ற குட்லக், “எனக்கு பிராந்தி வாங்கிக்கொடு” என்று மிரட்டியிருக்கிறார். அதற்கு முத்துக்குமார் ‘நான் ஏன் உனக்கு பிராந்தி வாங்கிக் கொடுக்கணும்? உனக்கு வேணும்னா நீ போய் வாங்கிக்குடி.” என்று கூறியிருக்கிறார். தன்னுடன் ஒன்றாகச் சேர்ந்து குடிக்கும் முத்துக்குமார் இப்படிச் சொன்னவுடன் கோபமான மாரிச்செல்வம், அங்கு கிடந்த கம்பியை எடுத்து முத்துக்குமாரின் பின்னந்தலையில் ஓங்கி அடிக்க, அருகில் நின்றவர்கள் மாரிச்செல்வத்தைக் கண்டித்து அங்கிருந்து போகச் சொல்லியிருக்கின்றனர். ஆனாலும் மாரிச்செல்வம் அடிபட்ட முத்துக்குமாரைப் பார்த்து “நான் எப்ப கேட்டாலும் பிராந்தி வாங்கிக் கொடுக்கணும். மாட்டேன்னு சொன்னா கொல்லாம விடமாட்டேன்.”என்று மிரட்டிவிட்டே சென்றுள்ளார். முத்துக்குமார் அளித்த புகாரின்பேரில், ராஜபாளையம் வடக்கு காவல்நிலையத்தில் மாரிச்செல்வம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகியிருக்கிறது.
சம்பவம் 2
கூமாபட்டி, அமச்சியார்புரம் காலனியைச் சேர்ந்தவர் மாரியப்பன். தேங்காய் வெட்டும் கூலி வேலை பார்த்துவந்த இவர் குடும்பத்தைக் கவனிக்காமல், சம்பளத்தையும் வீட்டுக்குத் தராமல், தினமும் குடித்தே செலவழித்திருக்கிறார். மனைவி சுந்தரம்மாள் “தினமும் இப்படி குடிச்சிட்டு வர்றீங்களே. நான் செலவுக்கு என்ன பண்ணுவேன்.” என்று எப்போதும்போல் கணவரைத் திட்டியிருக்கிறார். அதற்கு மாரியப்பன் “ரெண்டு வருஷமா தீராத வயித்து வலில கஷ்டப்படறேன். ஆஸ்பத்திரிக்கு போயும் குணமாகல. நான் உசிரோட இருந்து என்ன பண்ணப்போறேன்.” என்று கூறியிருக்கிறார். குடியினால் கணவருக்கு ஏற்பட்ட உடல் உபாதையை உணர்ந்த சுந்தரம்மாள் “மொதல்ல குடிக்கிறத விடுங்க.. எல்லாம் சரியாயிரும். மருந்த குடிங்க, குணமாயிரும்.”என்று சொல்லிவிட்டு, தன் மகளுடன் படுக்கச் சென்றுவிட்டார். காலையில் 05.00 மணிக்கு கணவரை எழுப்பச் சென்றபோது, தகரக்கொட்டகையில் உள்ள இரும்புக்கம்பியில் சேலையால் தூக்கிட்டு மாரியப்பன் தொங்கியிருக்கிறார். அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுசென்றபோது, ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறியிருக்கிறார் அரசு மருத்துவர். மாரியப்பனின் இறப்பு குறித்து கூமாபட்டி காவல்நிலையம் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறது.
சம்பவம் 3
அருப்புக்கோட்டை ம.ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் அசோக்குமார். சொந்தமாக மரக்கடை வைத்திருக்கும் இவர், குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உடல்நலப் பாதிப்புக்கு ஆளாகியிருந்தார். இவர், தன் மனைவி ஜானகியிடம் மரக்கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார். மதியம் சாப்பாடு எடுத்துக்கொண்டு கணவரைப் பார்க்க ஜானகி சென்றபோது, அங்கே படுக்கையில் வாந்தி எடுத்தநிலையில் கிடந்திருக்கிறார். அருப்புக்கோட்டை மருத்துவமனைக்கு முதலில் கொண்டுபோய், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சை பலனளிக்காமல் அசோக்குமார் இறந்துபோனார். எம்.ரெட்டியபட்டி காவல்நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.
மதுவால் இதுபோன்ற சம்பவங்கள் விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருவது வேதனைக்குரியது.