கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் தீப்பெட்டி ஆலை தொழிலாளர்களுக்கு தலா ரூபாய் 1,000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக சமூக தனிமைப்படுத்துதலை உறுதி செய்ய மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005- இன் கீழ் 24.03.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அடுத்து, பொதுமக்களின் சிரமங்களைக் குறைப்பதற்காகப் பல்வேறு தரப்பினருக்கும் கரோனா சிறப்பு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முழுவதும் 1,778 தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டத்தின் (E.S.I) கீழ் பதிவு பெற்ற சுமார் 21,770 தொழிலாளர்களுக்கு தலா 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். இதற்காக 2,177 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது." இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.