Skip to main content

"மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுக"- முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!

Published on 26/05/2021 | Edited on 26/05/2021

 

agricultural bills union government tamilnadu chief minister mkstalin

 

மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (26/05/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்ற நடைமுறைகளைப் புறக்கணித்து அவசரம் அவசரமாகக் கொண்டுவந்த 'விலை உறுதி மற்றும் பண்ணை சேவைச் சட்டம் 2020', 'வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் சட்டம் 2020', 'அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020' ஆகிய மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் தங்கள் போராட்டத்தைத் துவங்கி இன்றுடன் (26/05/2021) ஆறு மாத காலம் நிறைவுபெறுகிறது.

 

இன்றளவும் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை, உணர்வுகளை மதித்து அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கு ஒன்றிய அரசு இதுவரை முன்வரவும் இல்லை. ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி அதற்கானத் தீர்வு காண்பதற்கும் முயற்சிக்கவில்லை என்பது கவலையளிப்பதாக இருக்கிறது.

 

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், 'இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறத் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, இவற்றை ரத்து செய்திட ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்படும்' என்று தமிழக மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. எனவே, டெல்லியில் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, மூன்று வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் தொடர்பாக திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்." இவ்வாறு முதல்வர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்