தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சேப்பாக்கம் வளாகத்தில் உள்ள பழைய சம்பள கணக்கு அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் கலந்து கொண்டவர்கள், போக்குவரத்து துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு ஆர்டிஓ பதவி உயர்வு வழங்க வேண்டும். மருத்துவத்துறை மற்றும் கல்வித்துறையில் நடைமுறையில் இருக்கும் கலந்தாய்வு பணியிட மாறுதல் முறையை போக்குவரத்து துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சுப் பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டு வரும் சட்டப்பூர்வமான பதவி உயர்வு பணியிட மாறுதல், பணி மூப்பு வரிசை சீரமைப்பு ஆகியன தாமதிக்காத தருணத்தில் வழங்க வேண்டும்.
போக்குவரத்து துறையில் இளநிலை உதவியாளர், உதவியாளர் உள்ளிட்ட அனைத்து பணி நிலையினருக்கும் தாமதமின்றி பதவி உயர்வு வழங்கிட வேண்டும் மற்றும் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். கல்வி தமிழ் வளர்ச்சித் துறை பொது நூலகத்துறை உருவாக்கப்பட்டது போல் போக்குவரத்து துறை ஆணையருக்கு உதவியாக பணி அமைப்பு நிர்வாகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.