இந்தியாவில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான பிரச்சாரத்தை, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், அரசியல் கட்சித் தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 43.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேபோல், சேலம் மாவட்டத்தில் 42.8 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 41.0 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 41.5 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியது. இதனால் அடுத்த 5 நாட்கள் தமிழகத்தில் அனல் காற்று வீசும்; மழைக்கு வாய்ப்பில்லை. தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.