கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை போலியாக ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) பயிற்சி முகாம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் 17 மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள கலையரங்கில் தங்கியுள்ளனர். இத்தகைய சூழலில் தான் கடந்த 9 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் கலையரங்கில் வழக்கம்போல் 13 வயது சிறுமி ஒருவர் உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த தேசிய மாணவர் படையின் பயிற்றுநர் என்று கூறியவரும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவருமான காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் (வயது 32) சிறுமியை அங்கிருந்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சிவராமனை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். முன்னதாக இவர் இந்த வழக்கில் சிக்கிய நிலையில் சிவராமன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கனிமொழி எம்.பி. இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி மாணவி சிவராமன் என்ற ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பள்ளியின் தலைமையாசிரியர் உட்பட 5க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், இனியும் இம்மாதிரியான மனிதத்தன்மையற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் உறுதியேற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.