நெல்லையை இரண்டாகப் பிரித்து தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நேரமோ என்னமோ விவகாரங்கள் பல்நோக்கு வழிகளில் பயணிக்கத் தொடங்கியுள்ளன. காரணம் பிரச்சனைக்கான முடிவு எட்டப்படாததே என்கிறார்கள்.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வளமானது தென்காசி உட்பட மூன்று தொகுதிகள். அதேசமயம் அதன் கீழ்புறம் சுமார் 42 கி.மீ. சதுர பரப்பளவு கொண்ட சங்கரன்கோவில் தொகுதி வறட்சி மேயும் ஏரியா. வறண்ட பூமியான இதற்கு பலவகையில் பெற வேண்டிய நிவாரணங்கள், பெற முடியரமல் போய்விடும் என்று தொகுதியின், திருவேங்கடம் தாலுகா, குருவிகுளம் உள்ளிட்ட பிற யூனியனின் மக்கள் முக்கியப் பிரமுகர்கள், எதிர்ப்பு தெரிவித்ததோடு பல்வேறு நலன் காரணமாக சங்கரன்கோவில், நெல்லையிலேயே நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆணையத்திடம் வைத்தார்கள். அதேசமயம் சங்கரன்கோவில் தொகுதி மக்களின் கல்வி, போக்குவரத்து, மருத்துவம், வறட்சி போன்ற அனைத்துப் பிரச்சனைகளையும் முன் வைத்து தொகுதிவாசியான வைகோ, அரசு வரை கொண்டு போனார். நெல்லையுடன், சங்கரன்கோவில் இணைந்தே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனிடையே புதிய மாவட்டமான தென்காசி, சங்கரன்கோவிலை உள்ளடக்கிய வரையரைக் கோப்பும், அது தவிர்த்து வரையறுக்கப்பட்ட கோப்பு உள்பட இரண்டு விதமான கோப்புகள் அரசுக்குப் போயிருப்பதாகவும் தகவல்கள் றெக்கை கட்டுகின்றன.
இத்தருணத்தில், சங்கரன்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக தனிமாவட்டம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் கோரிக்கை இயக்க ஒருங்கிணைப்பு குழுவினரான வியாபாரிகள் சங்க தலைவர் முத்தையா செயலர் குருநாதன், மனோகர், அரசமணி ஆறுமுகச்சாமி உள்ளிட்டோர் அமைச்சர் ராஜலட்சுமியிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்ததுடன் வரும் 17ம் தேதி இதனை வலியுறுத்தி தொகுதி முழுக்க கடையடைப்பு போராட்டமும் அறிவித்துள்ளனர்.
1784களில் சங்கரன்கோவில் பகுதியான நெல்கட்டும் செவல் பாளையத்தை ஆண்ட மாமன்னன் பூலித்தேவன் வெள்ளையருக்கு வரியாக ஒரு குன்று மணி நெல் கூடத் தரமாட்டேன் என்று சுதந்திரத்திற்காக முதல் குரலிட்ட மூத்த மன்னனே பூலித்தேவன், மற்றவர்கள் எல்லாம் அவர் அடியொற்றி வந்தவர்களே. அப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்ட மன்னன் ஆண்ட பூமி சங்கரன்கோவில் பகுதி. அதோடு தென்காசி மேற்கு, முனையிலமைந்துள்ளது, வடமுனை, மற்றும் கீழ்முனைப் பகுதி மக்கள் தென்காசியை அடைய நீண்ட நேரம் பிடிக்கும். ஆனால் குறிப்பில் அடங்கிய தொகுதிகளுக்கு மத்தியில் அமையப் பெற்றது சங்கரன்கோவில். வரையறுக்கப்பட்ட பகுதிகளின் அனைத்து மக்களும் வந்துசேரும் காலமும் குறைவு. எனவே மக்கள் நலன் பொருட்டு சங்கரன்கோவிலை தலைமையிடமாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
காலதாமதம். பிரச்சனைகளைப் பல் நோக்கு வழிகளில் பயணிக்கச் செய்து விடும். தேசத்தை ஆண்ட பிரதமர் இந்திராகாந்தி காலத்தில் சொல்லப்பட்ட வரிகள் இவைகள்.