இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து தமிழக, செய்தி மக்கள் தொடர்புத்துறை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “இலங்கைக் கடற்படையினரால் ஏழு தமிழக மீனவர்கள் 27-10-2022 அன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு நேற்று (27-10-2022) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், IND-TN-10-MM-365 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் நேற்று (27-10-2022) மீன்பிடிக்கச் சென்ற ஏழு தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், ஏற்கனவே தமிழக மீனவர்களின் 98 மீன்பிடிப் படகுகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது என்பதை மீண்டும் தாம் வலியுறுத்த விரும்புவதாகவும் பாக்ஜலசந்திப் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்குத் தொடர்ச்சியான அச்சுறுத்தலாகும் எனவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்திய மீனவர்கள் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும் போது இதுபோன்ற தொடர்ச்சியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்திட வலுவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்ற தனது முந்தைய யோசனையை மீண்டும் வலியுறுத்த விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ளார்” எனக் கூறப்பட்டுள்ளது.