தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஜூலை 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து கட்டுக்குள் வந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
''கரோனாவில் இருந்து மீண்டு வருகிறோம். கரோனா கட்டுக்குள் வந்துள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு முழுமையாக கடைபிடித்த மக்களுக்கு நன்றி. மக்களின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்களுக்கு நன்றி. மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, மாநில மருத்துவ கட்டமைப்பு, துடிப்பான நிர்வாகம் காரணமாக தொற்று குறைந்துள்ளது.
எந்த அலையையும் தாங்கும் வல்லமை இந்த அரசுக்கு உள்ளது. கரோனாவை கட்டுப்படுத்திவிட்டதாக மக்கள் யாரும் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. மக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், பூங்காக்களை திறக்கவில்லை. மக்களின் வாழ்வாதாரத்தின் மீதுள்ள அக்கறை காரணமாக அலுவலகங்கள், உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வாதாரம், மாநில பொருளாதார கணக்கத்தின் காரணமாகவே தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசியை முழுமையாக வழங்கவில்லை. தடுப்பூசிகள்தான் கரோனாவை எதிர்க்க மிகப்பெரிய ஆயுதம், கேடயமாகும்'' என தெரிவித்துள்ளார்.