ஒரு பேருந்து நிலையத்திலும் கூட பயணிகள் குடிக்க தண்ணீர் வைப்பதில்லை. ஆனால் ஒரு அரசு பேருந்து நடத்துனர் தன் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தினசரி 60 லிட்டர் தண்ணீரை குடிக்க கொடுகிறார். அவசரமாக பேருந்தில் ஏறும் பயணிகள் தாகம் வந்தாலும் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் தாகத்தில் அவதிப்படுவதை காண முடியும். ஆனால் மதுரை – தஞ்சை பேருந்தில் ஏறினால் அனைவருக்கும் தாகம் தணிக்க தண்ணீர் கொடுப்பார் அந்த நடத்துனர் என்கிறார்கள் பயணிகள்.
மதுரை போக்குவரத்துக் கழகத்தில் இருந்து மதுரை – தஞ்சை செல்லும் நீண்ட தூரப் பேருந்து புதுக்கோட்டை வழியாக செல்கிறது. அந்த பேருந்தில் பயணிகள் சுமார் 4 மணி நேரம் வரை தொடர்ந்து பயணிக்க வேண்டியுள்ளது. அவசரத்தில் தண்ணீர் எடுக்காமல் வரும் பயணிகள் அச்சப்பட தேவையில்லை. பயணிகளுக்கு பயணச் சீட்டு கொடுத்து முடித்த பிறகு தண்ணீர் பாட்டில்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பயணியிடமும் சென்று குடிக்க தண்ணீர் வேண்டுமா என்று கேட்கிறார் நடத்துனர். தாகத்தில் இருக்கும் பயணிகள் அவர் கொடுக்கும் தண்ணீரை வாங்கி குடிக்கின்றனர். பிறகு எப்ப யாருக்கு தாகம் எடுத்தாலும் தயங்காமல் கேளுங்க தண்ணீர இருக்கு என்று சொல்லிவிட்டு தனது இருக்கையில் அமர்கிறார்.
அந்த நடத்துனர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் திருஞானம்(45). அவரே சொல்லும் போது.. நீண்ட தூரம் பயணம் செல்லும் போது தாகம் எடுத்து தண்ணீர் கிடைக்காமல் நானே பலமுறை தவித்திருக்கிறேன். எல்லா பயணிகளும் தண்ணீர் கொண்டு வருவதில்லை. அதை நினைத்து தான் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நான் செல்லும் பேருந்தில் உள்ள பயணிகளுக்கு தாகம் தணிக்க குடிதண்ணீர் வழங்கி வருகிறேன். ஒரு நாளைக்கு சுமார் 60 லிட்டர் வரை தண்ணீர் கொடுக்கிறேன். ஒவ்வொரு இடத்திலும் நல்ல தண்ணீர் கிடைக்கும் இடங்களில் தண்ணீர் பாட்டில்களில் நிரப்பி வைத்துவிடுவேன். பிறகு பயணிகளுக்கு கொடுப்பது வழக்கம். நான் தண்ணீர் கொடுப்பதை பார்த்து பயணிகள் என்னிடம் அன்பாக பேசுவார்கள். பலரும் என்னை பாராட்டி செல்கிறார்கள் என்றார். பல பேர் என் செல்போன் எண் 9786754347 லும் பாராட்டு சொல்கிறார்கள் என்றார்.
பயணிகளின் தாகம் தணிக்கும் அரசு பேருந்து நடத்துனரின் செயலை பார்த்து புதுக்கோட்டை போக்குவரத்துக் கழக அதிகாரிகளும், வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் பலதுறை அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி பொன்னாடை அணிவித்தனர்.