சபாநாயகரின் நடவடிக்கை
சட்டத்துக்கு முரணானது: தொல்.திருமாவளவன்
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேரை கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்து சட்டப்பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சட்டப்பேரவைத் தலைவரின் இந்த உத்தரவு சட்டத்துக்குப் புறம்பானது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம், நீதிமன்றம் உறுதியாக இதை ரத்து செய்துவிடும் என்று நம்புகிறோம்.
கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்படி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தாம் சார்ந்திருந்த கட்சியில் இருந்து விலகினாலோ அல்லது கட்சி கொறடா உத்தரவுக்கு எதிராக சட்டப் பேரவையில் வாக்களித்தாலோதான் அவரது பதவியைப் பறிக்க முடியும். இந்த 18 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் மேற்சொன்ன இரண்டு விதிகளுமே பொருந்தவில்லை. எனவே, பேரவைத் தலைவரின் உத்தரவு சட்டத்துக்கு மாறானது என்பது தெளிவாகிறது.
ஆளும் கட்சிக்குப் பெரும்பான்மை இல்லை என்பது தெளிவாகத் தெரியும் நிலையில் தமிழக சட்டப்பேரவையைக் கூட்டி ஆளுங்கட்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பிற அரசியல் கட்சிகளும் தொடர்ந்து ஆளுநரை வலியுறுத்திவந்தன. ஆனால் பெரும்பான்மை இல்லாத அரசு நீடிப்பதற்கு உதவும் விதமாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். இது கண்டனத்துக்கு உரியதாகும்.
பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையைக் கூட்ட உத்தரவிடவேண்டும் என்று திமுக தொடுத்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் பேரவைத் தலைவர் எடுத்துள்ள இந்த நடவடிக்கை உயர்நீதிமன்றத்தை அவமதிப்பதாக மட்டுமின்றி வாக்களித்த மக்களைக் கேவலப்படுத்துவதாகவும் உள்ளது. இது பேரவைத் தலைவர் என்னும் பதவியின் கண்ணியத்துக்கு உகந்ததுதானா என்பதைப் பேரவைத் தலைவர் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
தமிழகத்தில் நிலவும் நிலையற்ற அரசியல் சூழலைக் கவனத்தில் கொண்டு உயர்நீதிமன்றம் உரிய நடவடிக்கையைவிரைந்து எடுக்கும் என நம்புகிறோம். இதற்கு மேலும் குழப்பம் விளைவிக்க முயற்சிக்காமல் மத்திய அரசும் ஆளுநரும்பாராளுமன்ற ஜனநாயகத்தை மதிப்பதற்கு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.’’