லைசென்ஸ் பெற்று மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சூதாட்ட விடுதிகள் ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கிறது. பெயருக்கு இது பொழுதுபோக்கு விளையாட்டு என்று கூறப்பட்டாலும் ஒவ்வொரு கிளப்புகளில் பணம் வைத்து சீட்டு ஆடுவது வழக்கமாக உள்ளது. ஈரோட்டில் சுமார் ஒன்பது கிளப்புகள் ஜோராக சீட்டாட்டத்தில் இருந்து வந்தது. குறிப்பாக அரசியல்வாதிகள் பலரும் இந்த கிளப்புகளில் அதிகம் இருப்பார்கள்.
அதனால் போலீசும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. இந்த நிலையில்தான் ஈரோடு எஸ்பி சக்தி கணேசன் இன்று திடீரென்று அதிரடியாக எல்லா கிளப்புகளையும் மூடி சீல் வைத்துவிட்டார். லைசென்ஸ் பெற்று வந்தாலும் சரி லைசென்ஸ் பெறவில்லை என்றாலும் சரி இனிமேல் இங்கு சீட்டாட்ட கிளப்புகள் நடக்கக்கூடாது என்று அதிரடியாக எஸ்பி செயலில் இறங்கி இருப்பது ஈரோடு மக்களை ஆச்சரியப்பட வைக்கிறது.
எஸ்.பி. இப்படி அதிரடி காட்டினாலும் இந்த கிளப்புகளின் உரிமையாளர்கள் இங்கு வந்து சீட்டாடும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் தான். இப்போது இவர்கள் ஈரோடு மேற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் மாஜி அமைச்சருமான கே.வி.ராமலிங்கத்தை சந்தித்து "நம்ம பொழப்புலேயே மண்ணை போட்டுட்டார் இந்த எஸ்.பி.யை மாற்றுங்க.." என கோரிக்கை வைத்துள்ளார்களாம்.