ஈரோடு வீரப்பன் சத்திரம் அசோகபுரம் கலைமகள் 2வது வீதியைச் சேர்ந்தவர் சித்ரா (37). சித்ரா ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் ஜவுளிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவரது கணவர் செந்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவர்களுக்கு 20 வயதில் மகன் ஒருவர் உள்ளார். சித்ரா வியாபாரம் சம்பந்தமாக திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சென்றபோது, காங்கேயத்தைச் சேர்ந்த இசக்கியப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அடிக்கடி சித்ராவின் வீட்டில் வந்து இசக்கியப்பன் தங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 1ம் தேதி இசக்கியப்பன் அவரது மனைவியுடன் சண்டை போட்டு வந்து, சித்ராவின் வீட்டில் தங்கி, தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார். சித்ரா இசக்கியப்பனை கண்டிக்க, இசக்கியப்பன் சித்ராவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், மனவேதனை அடைந்த சித்ரா வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த இசக்கியப்பன், சித்ராவின் தோழி சங்கீதா ஆகியோர் சித்ராவை மீட்டு, சமாதானம் செய்து வீட்டிலேயே படுக்க வைத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை சித்ராவின் மகன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சித்ரா உடலில் பல காயங்களுடன் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். இதையடுத்து சித்ராவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு சித்ரா ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மகன், ஈரோடு வடக்கு போலீசில் தனது அம்மாவின் உடலில் பல இடங்களில் காயம் உள்ளதால் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.