காரைக்காலில் தனது மகளை விட அதிக மதிப்பெண்கள் எடுத்ததாகக் கூறி சிறுவனுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்த வழக்கில் சகாயராணி விக்டோரியா என்பவர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனையில் அந்த மாணவர் உயிரிழந்த நிலையில் மாணவரின் குடும்பத்தார், குற்றவாளியைக் கைது செய்தாலும் மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் சிறுவன் உயிரிழந்ததாகப் போராட்டம் நடத்தினர்.
பல்வேறு அமைப்புகளும் சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் புதுச்சேரி அரசு மூன்று மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு ஒன்றை அமைத்து சிறுவன் மரணம் தொடர்பான அனைத்து விவரங்களையும் சேகரிக்க ஆணையிட்டது.
மேலும் மூன்று மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக்குழு சிலதினங்கள் முன் தங்களது அறிக்கையை மருத்துவத்துறை இயக்குநரிடம் சமர்ப்பித்தனர். அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை ஆய்வு செய்து உரிய அறிக்கை இயக்குநர் சார்பில் நேற்று வெளியானது.
இந்நிலையில் மாணவருக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாக விசாரணை செய்த மருத்துவர்கள் கூறியுள்ளதாக புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை இயக்குநர் நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. காரைக்காலில் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருக்கின்றனர். அத்தனை பேருக்கும் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை என்ற ஒரு மருத்துவமனை மட்டுமே இருந்தும் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் அங்கு பணியாற்றாமல் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதை கண்டித்து இன்று மாவட்டம் முழுவதும் கடை அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இருந்தபோதும் தங்களுக்கு உரிய விளக்கம் கிடைக்கவில்லை என கூறி இன்று மாவட்டம் முழுதும் கடை அடைப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
10000 க்கும் அதிகமான சிறிய நடுத்தர கடைகள் அடைக்கப்பட்டன. பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.