விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோவிலுக்குள் அதே ஊரைச் சேர்ந்த பட்டியலின மக்களை வரவிடாமல் மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் அந்தக் கோயிலில் வழிபட வந்த கதிரவன் என்ற பட்டியலின இளைஞரை அங்கிருந்த மற்றொரு பிரிவினர் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், கதிரவன் தாக்கப்பட்டது தொடர்பாக நியாயம் கேட்க வந்தவர்களும் தாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
மேலும், இந்தக் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் என்பதால் இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையாகியது. இதனால் பட்டியலின மக்களை வழிபட அனுமதிக்காதது குறித்து விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்ததியுள்ளனர். ஆனாலும் பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடவே முடியாது என மற்றொரு தரப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரே ஊரில் வசிக்கின்ற சக தமிழர்களை கோவிலுக்குள் அனுமதிக்காத நிலையைக் கண்டித்து அரசியல்வாதிகளும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்து வந்தனர்.
இந்நிலையில், இந்தப் பிரச்சினையை சுமுகமாக முடிப்பதற்காக மேல்பாதி சுற்றுவட்டாரப் பகுதியைச் சார்ந்த மயிலம், விக்கிரவாண்டி, விழுப்புரம் எம்.எல்.ஏக்கள், எம்.பி என அனைவரும் சேர்ந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போதும் அந்த மக்கள் சமாதானமாகாமல் முரண்டு பிடித்துள்ளனர். அதன் பிறகு கோட்டாட்சியர் தலைமையில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அதையும் கேட்க மறுத்து பட்டியலின மக்களை கோவிலுக்குள் விடவே முடியாது என அடம்பிடித்துள்ளனர். இந்நிலையில், ஜூன் 7 ஆம் தேதிக்குள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் 11 கட்சிகளின் சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படாததால் ஜூன் 6 ஆம் தேதி இரவு மேல்பாதி கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு அங்கு வந்த விழுப்புரம் கோட்டாட்சியர் திரெளபதி அம்மன் கோவிலுக்கு பூட்டு போட்டு சீல் வைத்துள்ளார். இதனால் மேல்பாதி கிராமத்தில் மேலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. மேலும் அந்தப் பகுதியில் வன்முறை நடக்காமல் இருக்க வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.