Skip to main content

எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே துரோகம்! -தேர்தல் களத்தில் ஆளாளுக்கு உச்சரிக்கின்றனர்! 

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

 

சாத்தூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அப்போது, கூட்டத்தினூடே தலையில் குடத்துடன் முளைப்பாரி போன்ற ஒன்றை எடுத்துச் சென்றார் ஒருவர். உடனே, ஓ.பி.எஸ். “கொஞ்சம் வழிவிடுங்க தம்பிகளா..” என்றவர்,  “தாய்மார்களே! குலவை போடுங்க!” என்று கேட்டுக்கொள்ள, பிரச்சார வாகனத்தின் முன்னால் நின்ற பெண்கள் பலரும் குலவையிட்டனர். குலவைச் சத்தத்தால் குஷியான ஓ.பி.எஸ். “மைக் வேணுமா?” என்று பெண்கள் பக்கம் திரும்பிக் கேட்டுவிட்டு, “இதுவந்து தென்னாட்டு தாய்மார்களின் தேசிய கீதம்.. இந்தக் குலவை போடறது..” என்று டைமிங்காகப் பேச, குலவைச் சத்தம் மேலும் அதிகமானது. 

 

op

 

அடுத்து பிரச்சாரத்தை தொடர்ந்த ஓ.பி.எஸ். 

“இப்படி துரோகம் பண்ணிட்டு..  யாரு தினகரன்? அவரைப்பத்தி எனக்கு நல்லா தெரியும். நல்லாத் தெரியும். எங்க பெரியகுளத்துலதான் இருந்தாரு. 2007-ல் ராஜ்யசபா உறுப்பினரா இருந்தப்ப,   ‘போ தம்பி.. வீட்டுக்குப் போ தம்பி. அரசியலில் ஈடுபடக்கூடாது; அரசியலைப்பத்தி பேசக்கூடாது. பார்லிமெண்டுக்குள்  நுழையக்கூடாது’ன்னு அம்மா விரட்டி விட்டாங்க. பத்தாண்டு காலம் தினகரன் மூஞ்சிலயே முழிக்கல ஜெயலலிதா.

 

 அடிப்படை உறுப்பினர்ல இருந்து எடுத்துட்டாங்க. ஜெயலலிதாவுக்கு உடம்பு சரியில்லாம இருந்தப்ப நாங்கள்லாம் தாடி வளர்த்துக்கிட்டு கோயில் கோயிலா போயி அவங்க பூரணநலம் பெறணும்னு வேண்டிக்கிட்டிருந்தோம். அப்ப தினகரன் எங்கேயிருந்தாரு? இறந்ததுக்குப் பின்னால வந்தாரு. கட்சியும் ஆட்சியும் தன்னுடைய இரும்புப்பிடிக்குள் கொண்டுபோக வேண்டுமென்று செய்த துரோகச் செயலால்தான் இன்றைக்கு இவ்வளவு பிரச்சனை வந்திருக்கு. தேவையில்லாத தேர்தலை உருவாக்கியவர்களுக்கு சாத்தூரில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.” என்றார் சீற்றமாக.  

 

இந்தத் தேர்தல் களத்தில், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., மட்டுமல்ல. டிடிவி தினகரனும் துரோகம் என்ற சொல்லையே அதிகமாக உச்சரித்து வருகிறார். துரோகம் செய்ததாக எம்.ஜி.ஆர். மீது ஜெயலலிதாவும், ஜெயலலிதா மீது எம்.ஜி.ஆரும் பரஸ்பரம் குற்றம் சாட்டியதெல்லாம் வரலாறு. கட்சித் தலைமையாக இருந்தவர்கள் வாழ்ந்து  காட்டிய வழியில், அதே துரோகத்தை இன்றுவரையிலும் சிலர் தொடர்கிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்