கரூர் மாவட்டம் நாகப்பள்ளி கிராமம், முத்து கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றுப்படுகையில் தொடர்ந்து மணல் திருட்டு நடப்பதாக பல புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக ராஜபுரம் பகுதியை சேர்ந்த மாட்டு வண்டி கும்பல் தற்போது மணல் திருடும் வேலையை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் கண்டறிந்து அதனை தடுக்க முயன்றுள்ளனர்.
இதனிடையே மணல் திருடும் கும்பல் தொடர்ந்து திருட்டுத்தனமாக மணலை அள்ளி செல்லும் போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குறிப்பாகப் பெண்கள் பலர் மணல் அள்ளிச் சென்ற மாட்டு வண்டிகளை வழிமறித்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மாட்டு வண்டியில் மணல் அள்ளும் கும்பல் பொதுமக்களை தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த மணல் கொள்ளை சம்பவம் குறித்து பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.