Skip to main content

குடிநீர் தட்டுப்பாட்டை உருவாக்கும் மணல் கொள்ளை...!

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் கிராமத்தில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட வீடுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களுக்கு அருகிலுள்ள தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட கம்மகிருஷ்ணம்பல்லி என்கிற குக்கிராமத்துக்கு அருகே செல்லும் பாலாற்றங்கரையில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு பூமிக்கு அடியில் பைப் லைன் மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் வழங்கபட்டு வருகிறது.

 

water

 

இந்நிலையில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு இருக்கும் பகுதிக்கு அருகில், அரசின் அனுமதியின்றி மணல் திருடுவது, பாலாற்றங்கரையோரம் புறம்போக்கு நிலம், தனியார் நிலங்களை குத்தகைக்கு எடுத்து மணல் அள்ளுவது என அப்பகுதியை சேர்ந்த ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் ஈடுபடுகின்றனர். 
 

இதுபற்றி அதிகாரிகளிடம் முறையிட்டும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை, அந்தளவுக்கு வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, கனிமவளத்துறை, காவல்துறை எனக் கப்பம் கட்டுகிறார்கள். பல அடி ஆழத்திற்கு பள்ளம் போட்டு பகல் - இரவு பேதமில்லாமல், டிப்பர் லாரி, டிராக்டர் மற்றும் மாட்டுவண்டிகளில் உள்ளூர் மற்றும் கர்நாடகாவிற்கு மணல் கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
 

இதனால் ஆழ்துளை கிணறுகள் நீரில்லாமல் போவதால் கிராமங்கள் தண்ணீரில்லாமல் தவிக்கின்றன. இதனை இப்போதே தடுக்காவிட்டால் தற்போது கிடைக்கும் ஓரளவு குடிதண்ணீரும், இரண்டு வாரத்துக்கு ஒருமுறை தரப்படும் குடிநீரும் தரமுடியாத நிலை ஏற்படும். இதனால் மக்கள் சாலைக்கு வந்து போராடுவார்கள் என்கிறார்கள் ஆம்பூர் பகுதி சமூக ஆர்வலர்கள்.

 

water

 

வேலூர் மாவட்டத்தின் கிழக்கு பகுதியை சேர்ந்த அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த கிராம புற மக்கள் குடிதண்ணீர் இல்லாததால் அடிக்கடி சாலை மறியலில் ஈடுபடுகின்றனர். அந்த நிலை ஆம்பூர், வாணியம்பாடி பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் வந்துவிடும் நிலையை மணல் கொள்ளையர்கள் ஏற்படுத்திவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்