பாலேஸ்வரம் ஜோசப் கருணை இல்லத்தின் மீது வழக்கு பதிவு செய்ய கோரிய வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை ஒரு வார காலத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லத்தில் தங்கியிருக்கும் முதியவர்கள் இறந்த பின்னர் சட்டவிரோதமாக அவர்களது எலும்புகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இல்லத்தில் சேர்க்கப்படும் முதியவர்கள் 4 நாட்களுக்குள் மர்மமான முறையில் இறப்பதாகவும், நகராட்சியிடம் முறையான அனுமதி வாங்காமல் அவர்களின் உடல்கள் அப்புறப்படுத்தப் படுவதாகவும் குற்றம்சாட்டிய தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் தமிழக டிஜிபி-யிடமும், காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் ஆய்வாளரிடம் புகார் கொடுத்தது. கருணை இல்லம் மீதும், அதன் நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்யக் கோரி சங்கத்தின் தலைவர் கலைச்செல்வி பிப்ரவரி 22ல் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மார்ச் 16ஆம் தேதிக்குள் சாலவாக்கம் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.