சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயா (வயது 67). இவர் தனது வீட்டின் முகப்பில் மளிகைக் கடை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி, மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணும் ஆணும் வந்துள்ளனர். அப்போது அவர்கள் மளிகைக் கடை முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு மூதாட்டி விஜயாவிடம் முகவரி கேட்பது போல் விசாரித்துள்ளனர். பின்னர் அவர்கள் தங்களுக்குத் தாகமாக இருப்பதாகக் கூறி, குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டுள்ளனர். அதையடுத்து விஜயா தண்ணீர் கொண்டு வருவதற்காக வீட்டிற்குள் சென்றார். அவரைப் பின்தொடர்ந்து சென்ற அவர்கள் இருவரும் திடீரென்று மூதாட்டியின் கழுத்தில் தலையணையை வைத்து அழுத்தி, அவர் அணிந்திருந்த 7 பவுன் நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில், ஏத்தாப்பூர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர். இந்நிலையில் வாழப்பாடி டிஎஸ்பி ஹரிசங்கரி தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணும், இளைஞரும் வந்துள்ளனர். அவர்களைப் பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளனர். சந்தேகத்தின் பேரில், கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்துடன் ஒப்பிட்டுப் பார்த்ததில் இவர்கள் தான் மூதாட்டி விஜயாவிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, விஜயாவிடம் நகைப் பறித்ததை ஒப்புக்கொண்டனர். விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த சாமுவேல் மனைவி மோனிஷா (32) என்பதும், சுப்பு மகன் சுபாஷ் (22) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து 7 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.