சேலத்தில் ரூபாய் 441 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். மேலும் சேலத்தின் வணிகப்பகுதியான லீ பஜாரில் கட்டப்பட்ட ரூபாய் 46.35 கோடி மதிப்பிலான ரயில்வே மேம்பாலத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். அதேபோல் சேலம் ராக்கிப்பட்டியில் அரசு சட்டக்கல்லூரிக்கு ரூபாய் 96.54 லட்சத்தில் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டினார்.
சேலம் மாவட்டம் குரங்குசாவடி முதல், புதிய பேருந்து நிலையம் வழியே அண்ணாப்பூங்கா வரை கட்டப்பட்ட பாலம் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 7.87 கி.மீ. தூரத்துக்குக் கட்டப்பட்ட புதிய ஈரடுக்கு மேம்பாலம் திறப்பால் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. லீ பஜார்- லாரி மார்க்கெட் இடையே கட்டப்பட்ட பாலம் திறப்பால் தடையின்றி வாகனங்களில் மக்கள் பயணிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேம்பாலங்களைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, "சேலம் மக்களின் நீண்டநாள் கனவை நிறைவேற்றும் விதமாக ஈரடுக்கு மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. கரோனா உயிரிழப்பு விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை; மறைக்கவும் முடியாது; புள்ளி விவரங்கள் அடிப்படையிலேயே கரோனா உயிரிழப்புகள் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன. கரோனா குறித்த அனைத்துத் தகவல்களும் ஒளிவுமறைவின்றி அறிவிக்கப்படுகின்றன. இந்தியாவிலேயே இறப்பு சதவிகிதம் தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது. கரோனாவால் மட்டும் பாதிக்கப்பட்டு இறந்தோர் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது. கரோனா பாதிப்புடன் சேர்ந்து பல்வேறு நோய் உள்ளவர்களால்தான் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது.
சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் பாதிப்பு அதிகமாக உள்ளது. சேலம் உள்பட பல மாவட்டங்களில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால் கரோனா வேகமாகப் பரவிவிடும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் வெண்டிலேட்டர்கள் உள்ளன. தமிழகத்தில் கரோனா பாதிப்பு சமூகப் பரவலாக இன்னும் மாறவில்லை. தமிழகத்தில் அனைத்துத் தளர்வுகளும் அளிக்கப்பட்டுவிட்டன." இவ்வாறு முதல்வர் கூறினார்.
அதைத் தொடர்ந்து திறந்து வைத்த ஈரடுக்கு மேம்பாலத்தில் தனது காரில் முதல்வர் பழனிசாமி பயணித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு துறைசார்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.