அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் எதிரில் கடை நடத்தி வருபவர் ராஜ். இரண்டு வருடங்களுக்கு முன், கிராம உதவியாளர் பணிக்கு அறிவிப்பு வந்தபோது இவரும், இவருடைய மனைவியின் தங்கை கார்த்திகாவும், அந்த வேலை கிடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆவின் பாலகத்தில் பணிபுரியும் சுந்தரகோபி, இவ்விருவரின் ஆர்வத்தைத் தெரிந்துகொண்டு அணுகினார். அப்போது சுந்தரகோபி, நரிக்குடி சமத்துவபுரத்தில் வசிக்கும் விஜயலட்சுமி, பலருக்கும் கிராம உதவியாளர் பணிக்கு ஏற்பாடு செய்து தருகிறார். அதற்கு ரூ. 5 லட்சம் வரை செலவாகும் என்று கூறியிருக்கிறார்.
பணம் கொடுத்து வேலை வாங்கத் தனக்கு விருப்பம் இல்லை என்று ராஜ் மறுத்தும், சுந்தரகோபியும் அவருடைய தந்தை முருகனும் அடிக்கடி ராஜுவை சந்தித்து ஆசை காட்டியுள்ளனர். இவர்களின் பேச்சை நம்பிய ராஜ், தனக்கும் தன் மனைவியின் தங்கை கார்த்திகாவுக்கும் கிராம உதவியாளர் வேலை வாங்கித் தரச்சொல்லி, சில தவணைகளில் வங்கி மூலமாகவும் நேரிலும் ரூ. 9,50,000 கொடுத்தனர்.
கிராம உதவியாளர் தேர்வை ராஜுவும் கார்த்திகாவும் எழுதினர். தேர்வு முடிவு வந்தபோது, ராஜ் மற்றும் கார்த்திகா பெயர்கள் இல்லை. அதனால் ஏமாற்றமடைந்த ராஜ், சுந்தரகோபியிடமும் முருகனிடமும் காரணம் கேட்டார். அதற்கு அவர்கள் “அதிகமாகப் பணம் தந்தவர்களுக்குத்தான் வேலை தந்துள்ளனர்.” என்று கூற, பணத்தைத் திருப்பிக் கேட்டார் ராஜ். பணத்தைத் தராமல் காலதாமதம் செய்து வந்த அவ்விருவரும் ஒரு கட்டத்தில், “பணத்தைக் கேட்டு வந்தால் உன்னை இந்த ஊரில் வாழ விடமாட்டோம். அடித்தே கொன்று விடுவோம்.” என்று மிரட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் சுந்தரகோபி, விஜயலட்சுமி மற்றும் முருகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யும்படி மனுத் தாக்கல் செய்தார் ராஜ். CRMP No.3526/2023-ன் படி வரப்பெற்ற உத்தரவின் பேரில், அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையம் மூவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.