ஒருவாரத்தில் முடிவு தெரியும் - டிடிவி.தினகரன்
தஞ்சையில், டி.டி.வி.தினகரன் மாமியார் சந்தானலட்சுமி படத்திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் சசிகலாவின் கணவர் நடராஜன் மற்றும் டி.டி.வி.தினகரன், சசிகலாவின் தம்பி திவாகரன், எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், சாத்தூர் சுப்பிரமணியன், ரங்கசாமி, செந்தில்பாலாஜி, மாரியப்பன் கென்னடி, ஜக்கையன், சுந்தர்ராஜன், தங்க தமிழ்ச்செல்வன், உமா மகேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதன்பிறகு, நிருபர்களுக்கு டிடிவி.தினகரன் அளித்த பேட்டி: அதிமுக மாபெரும் மக்கள் இயக்கம். அது சிறப்பாக செயல்பட்டு தலைசிறந்த இயக்கமாக இருக்க என்ன தேவையோ அதை நிச்சயம் செய்வோம். அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்போது அப்போது முடிவு செய்யப்படும். கட்சியில் உள்ள பல்வேறு பொறுப்பாளர்கள் பல்வேறு தொண்டர்களுடன் இணைந்து இலக்கை நோக்கி கொண்டு செல்ல வேண்டுமென என்னை துணை பொது செயலாளராக சசிகலா நியமித்தார். இதில் மாறாமல் கட்சி சிறப்பாக வளர்வதற்கு என்னால் ஆன முயற்சி செய்வேன். அதிமுகவை அழிக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பது உண்மைதான்.
பயம், சுயநலம் காரணமாக சசிகலா குடும்பத்தை வெளியேற்ற வேண்டுமென சிலர் சொல்கின்றனர். தவறு செய்தவர்கள் மீது பயமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை அனுமதி மறுத்தாலும் மேலூரில் கட்சி பொதுக்கூட்டம் நடக்கும். இதை பொறுத்திருந்து பாருங்கள். தேர்தல் ஆணைய உத்தரவை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் என்னை பதவியிலிருந்து நீக்குவதாக தீர்மானம் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து தேர்தல் கமிஷனில் புகார் அளித்தால் பதவி பறிபோகும். பொருளாளர் பதவி செல்லும்போது, துணை பொது செயலாளர் பதவி ஏன் செல்லாது. அதிமுகவில் 23 வயதிலிருந்து இருக்கிறேன். சட்ட திட்டங்கள் அனைத்தும் எனக்கு தெரியும். அதிமுக நலன்கருதி எதையும் துணிச்சலாக மேற்கொள்வேன்.
பொதுக்குழுவை கூட்டாமல் யாரையும் நீக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது. ஒருவாரம் பொறுத்திருந்து பாருங்கள் பல்வேறு முடிவுகள் தெரியும். பொதுக்கூட்டத்தில் பிரச்னை குறித்து அனைத்து விவரங்களையும் தெரிவிப்பேன். இவ்வாறு கூறினார்.