
தேனி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் ரகு ,கணேசன் என்ற இருவரின் பணி இடமாற்ற உத்தரவையும், தற்காலிக பணியிடை நீக்க உத்தரவையும் நிறுத்திவைக்க கோரிய வழக்கில் காவல்துறை தலைவர்,தேனி மாவட்ட எஸ்.பி., பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு.
தேனி மாவட்டம் ஆயுதப்படை காவலர்கள் ரகு மற்றும் கணேஷன் ஆகிய 2 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தனித் தனியாக மனுக்கள் செய்திருந்தனர். அந்த மனுவில் " நாங்கள் இருவரும் தேனி மாவட்ட ஆயுத படையில் இரண்டாம் நிலை காவலர்களாக பணிபுரிந்து வருகிறோம். எங்களை தேனி மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் வேண்டுமென்று உள்நோக்கத்துடன் பல தொந்தரவுகளை கொடுத்தார். ஜாதி ,பாகுபாடு அடிப்படையிலும் எங்களுக்கு தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து தேனி மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்தோம். ஆனால் எங்கள் புகாரில் எவ்வித பயனும் ஏற்படவில்லை.
இந்நிலையில் பிப்ரவரி 2 ஆம் தேதி எங்களை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கபட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் சென்னை காவல்துறை தலைமை அலுவலக வாசலில் எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றோம்.
அருகில் இருந்தவர்கள் எங்களை காப்பாற்றினர். இந்நிலையில் எங்கள் மீது சென்னை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் மார்ச் 22 ஆம் தேதி எங்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தனர். எனவே எங்கள் இருவரின் பணி இடமாற்ற உத்தரவையும், தற்காலிக பணியிடை நீக்க உத்தரவையும் நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு இன்று நீதிபதி சுரேஷ் குமார் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது இதுகுறித்து தமிழக காவல்துறை தலைவர்,தேனி மாவட்ட எஸ்.பி.,ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.