தென்னக ரயில்வே, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மனீஷ் அகர்வால் வெள்ளிக்கிழமை சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு குடும்பத்துடன் வருகை தந்தார். பின்னர் இரவு, ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே விருந்தினர் மாளிகையில் தங்கி சனிக்கிழைமை காலை சிதம்பரம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், ரயில் நிலையத்தின் முகப்பு, ஆண், பெண் பயணிகள் காத்திருப்பு அறை, நடைமேடை நடை பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று ஆய்வு செய்தார்.
நடைமேடை முழுவதும் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்ட அவர், ரயில் நிலையம் மற்றும் கட்டிடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
அப்போது ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் இரவு நேரத்தில் கம்பன் விரைவு வண்டி சிதம்பரம் ரயில் நிலையத்தில் நிற்பது இல்லை. அதனை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைமேடையில் மின்விசிறி மற்றும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கைகளைத் தெரிவிக்க முயற்சித்தனர். ஆனால், ரயில்வே அலுவலர்கள் பயணிகளை அவரிடம் நெருங்கவிடவில்லை.
இதனை தொடர்ந்து சிதம்பரம் ரயில் நிலையத்தில் சுமார் 30 நிமிடங்கள் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்ட அவர் ஆய்வை முடித்துக் கொண்டு தனி ஆய்வு ரயிலில் திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றார். அவரது குடும்பத்தினர் காரில் புறப்பட்டுச் சென்றனர். இவருடன் முதன்மை ரயில்வே பாதுகாப்பு அதிகாரி சரவணன், முதன்மை கோட்ட பொறியாளர் ரவிக்குமார், கோட்ட இயக்குதல் மேலாளர் வெங்கட்ராமன், சிதம்பரம் ரயில் நிலைய மேலாளர் பவன் குமார், சிதம்பரம் இருப்பு பாதை காவல் ஆய்வாளர் அருண்குமார் உள்ளிட்ட ரயில்வே துறையினர் உடன் இருந்தனர்.