துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது சர்ச்சை ஆனது. இதற்கு ரஜினிகாந்த் இன்று தனது போயஸ்தோட்ட்டம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது, தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று உறுதியாக கூறினார். மேலும், ’’பெரியார் குறித்து இல்லாத ஒன்றை நான் பேசவில்லை. பத்திரிகைகள் மூலமாக நான் கேள்விப்பட்டதைத்தான் பேசினேன். 1971ல் சேலத்தில் நடந்த அந்த சம்பவம் மறுக்க முடியாதது. அதே நேரத்தில் மறக்க வேண்டியது ஆகும்’’ என்று கூறினார்.
சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினி கலந்து கொண்டு பேசியபோது, “1971-ல் உடை இல்லாமல் இருக்கும் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார். அன்றைக்கு அதை யாரும் துணிந்து பத்திரிகையில் பிரசுரிக்கவில்லை. ஆனால், ‘சோ’ அதை அட்டைப்படத்தில் போட்டுக் கடுமையாகக் கண்டித்தார். அதனால், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு சிக்கல் உருவானது. இதனால், துக்ளக் பத்திரிகையை சீஸ் செய்தார்கள். உடனே கொஞ்சமும் சளைக்காமல் மீண்டும் அச்சடித்து பிளாக்கில் புத்தகத்தை வெளியிட்டார். அப்புத்தகம் பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனையானது. அதன் மூலம் பத்திரிகை உலகில் சோ மிகவும் பிரபலமானார்’’என்று பேசினார்.
தந்தை பெரியார் ராமன் உருவத்தை செருப்பால் அடித்தார் என்று சொன்னது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று கூறி வருகின்றனர்.
ரஜினிகாந்த் இவ்வாறு பேசியதற்காக, அவர் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையேல், வருகிற 22.01.2020 (புதன்கிழமை) காலை 10 மணியளவில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படவுள்ளது என தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை. ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.
திராவிர் கழக தலைவர் கி.வீரமணி, ‘’ரஜினிகாந்த் இதற்கு தகுந்த விலையை கொடுப்பார். தவறான தகவலை தெரிவிக்கும் போது மற்றவர் சுட்டிக்காட்டினால் அதை ஏற்று திருத்திக் கொள்வதுதான் சரி. ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவர் எப்படி பேசுவார் என்பது அனைவருக்கும் தெரியும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அவர் என்ன நிலை எடுத்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான் ’’என்று தெரிவித்தார்.
இந்நிலையில்தான் ரஜினிகாந்த் தனது பேச்சுக்கு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.