Skip to main content

புதுக்கோட்டை புத்தகத்திருவிழா-2017; சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு

Published on 23/09/2017 | Edited on 23/09/2017
புதுக்கோட்டை புத்தகத்திருவிழா-2017; 
சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு

 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் 2 ஆவது புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவை முன்னிட்டு சிறந்த புத்தகங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புத்தகத் திருவிழாவிற்கான வரவேற்புக்குழுத் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் 2-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வருகின்ற நவம்பர் 24 முதல் டிசம்பர் 3-ஆம் தேதிவரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறவுள்ளது. இதில் 2016-ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த நூல்களுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளது.

மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை நூல்கள் ஒவ்வொன்றிற்கும் ஒன்று வீதம் மூன்று கவிதை விருதுகளும் அரசியல், சமூகம் சார்ந்த கட்டுரை நூல் ஒன்றிற்கும் அறிவியல், கல்வி சார்ந்த கட்டுரை நூல் ஒன்றிற்கும், கலை, இலக்கியம் மற்றும் வரலாறு சார்ந்த கட்டுரை நூல் ஒன்றிற்கும், எப்பொருளிலேனும் அமையும் மொழிபெயர்ப்பு கட்டுரை நூல் ஒன்றிற்குமாக நான்கு கட்டுரை விருதுகளும் அசல் சிறுகதை நூல் ஒன்றிற்கும், மொழிபெயர்ப்புச் சிறுகதை நூல் ஒன்றிற்குமாக இரண்டு சிறுகதை விருதுகளும் அசல் நாவல் ஒன்றிற்கும், மொழிபெயர்ப்பு நாவல் ஒன்றிற்குமாக இரண்டு நாவல் விருதுகளும் சிறந்த குழந்தை இலக்கிய நூல் ஒன்றிற்கான விருது என மொத்தம் 12 விருதுகள் அமைக்கப்பபட்டுள்ளன.

சான்றிதழ், விருதுப்பட்டயம் மற்றும் ரூபாய் 5 ஆயிரத்திற்கான பரிசுத்தொகை கொண்டதாக ஒவ்வொரு விருதுகளும் அமையும். மேற்படி விருதுகளுக்கான பரீசிலனைக்கு பதிப்பகத்தார், படைப்பாளிகள் மற்றும் வாசகர்கள் தங்கள் நூல்களையும் தாங்கள் பரிந்துரைக்கும் நூல்களையும் அனுப்பலாம். நூல்களை அனுப்புவோர் ஒவ்வொரு நூல்களுக்கும் இரண்டு நூல்களை அனுப்பி வைக்க வேண்டும். நூல்கள் வந்துசேர வேண்டிய கடைசிநாள் 07.11.2017. அனுப்ப வேண்டிய முகவரி: ராசி.பன்னீர்செல்வன், தலைவர், விருதுக்குழு, புதுக்கோட்டை புத்தகத்திருவிழா-2017, ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை -2. (பின்கோடு: 622 002) இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்