Skip to main content

நெல் வயலில் மீன் வளர்ப்பு; லட்சத்தில் வருவாய் பார்க்கும் விவசாய தம்பதி

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

pudukkottai paramppur farmer couple fisheries for paddy field

 

வயல்களில் நெல் நடவு செய்து உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து அறுவடை செய்த பிறகு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்பட்டு வட்டிக்கு கடன் வாங்கும் நிலை தான் இன்றளவும் இருக்கிறது. ஆனால், ஒரு தம்பதி நெல் நடவு செய்யும் வயலில் மீன் வளர்த்து அதிக லாபம் சம்பாதித்து வருவதுடன் ரசாயனக் கலப்பு இல்லாமல் நெல் அறுவடையும் செய்து சாதித்து வருகின்றனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் பரம்பூர் ஊராட்சியில் உள்ள சின்ன கிராமம் சேந்தங்கரை. இந்த கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி பொன்னையா தான், தனது மனைவி பாக்கியலட்சுமியின் முழு ஒத்துழைப்போடு நெல் வயலில் மீன் வளர்த்து வருகிறார். தங்களிடம் உள்ள 12 ஏக்கர் நிலத்தில் 4 ஏக்கர் நெல் நடவுக்காகவும் 8 ஏக்கரில் நெல் நடவும் மீன் வளர்ப்பும் என மாற்றி மாற்றி செய்து வருகிறார்கள். வயலில் வரப்பு மட்டத்திற்கு தண்ணீரை நிரப்பி மீன் கண்மாய்களில் கிடக்கும் பாசிகளை கொண்டு வந்து வளர்த்து அதற்குள் மீன் குஞ்சுகளை விட்டு பராமரித்து வளர்ப்பதுடன் மீன்கள் பெரிதான பிறகு நேரடியாக பொதுமக்களிடம் மட்டுமே விற்பனை செய்த பிறகு, அந்த வயலில் ஒரு முறை மீன் வளர்ப்பை தொடர்ந்து உழவு கூட செய்யாமல் திருந்திய நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நெல்லுக்கு உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஏதும் தெளிக்காமல், மீன் வளர்த்த வயல் என்பதால் இயற்கை சத்தில் நெல் விளைகிறது. இப்படியே மாற்றி மாற்றி நெல்லும் மீனும் வளர்க்கப்படுகிறது.

 

"2007 இல் இந்த முறையில் மீன் - நெல் வளர்ப்பை தொடங்கினோம். முதலில் மீனுக்கான தீவனங்கள் வாங்கி போட்டோம். பிறகு பாசிகள் மட்டுமே தீவனம். இந்த வேலைகளை எல்லாம் நானும் என் மனைவியுமே செய்கிறோம். தினசரி கவனிப்பது, மீன் பிடிப்பது எல்லாமே நாங்களே. வியாபாரிகளிடம் மீன் விற்பனை செய்வதில்லை. ஒரு கிலோ தொடங்கி 100, 200 கிலோ வரை நேரடியாக வரும் பொதுமக்களிடம் மட்டுமே விற்பனை செய்வதால் விலையும் குறைவதில்லை. வெளியூர் போகிறவர்களுக்கு ஆக்சிஜன் பாக்கெட்டில் மீன்கள் கொடுக்கிறோம். வருடத்திற்கு 8 முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. நெல்லை விட மீனில் வருவாய் அதிகம் கிடைக்கிறது" என்கிறார் பொன்னையா. "கல்யாணத்திற்கு முன்பு எங்க வீட்ல இருக்கும் வரை நான் மீன் சாப்பிட கூட மாட்டேன். ஆனால், கல்யாணம் ஆன பிறகு என் கணவருடன் சேர்ந்து மீன் வளர்ப்பை முழுமையாகச் செய்து வருகிறேன். நிறைவான வருவாய் கிடைக்கிறது" என்றார் பாக்கியலட்சுமி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.