Skip to main content

ரேங்க் சிஸ்டம் ரத்து உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள்!; பள்ளிக்கல்வித்துறை குறட்டை!

Published on 04/06/2018 | Edited on 04/06/2018
sub

 

எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 பொதுத்தேர்வுகளில் ரேங்க் முறை ஒழிப்பு உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளின் புகைப்படங்களுடன் விளம்பர பதாகைகளை வெளியிட்டுள்ளது, கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளியிடும்போது, மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்படும். அந்தந்த மாவட்ட அளவில் சாதனை படைத்தவர்களின் பெயர்களும் வெளியிடப்படும். இதுதான் காலங்காலமாக இருந்து வந்த நடைமுறை.

 

s1

 

இந்நிலையில், கடந்த ஆண்டு தேர்வு முடிவு வெளியிடுவதற்கு சில நாள்களுக்கு முன்பு, பொதுத்தேர்வுகளில் ரேங்க் முறை ஒழிக்கப்படும் என்றும், மதிப்பெண் விவரங்கள் மட்டுமே வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

அத்துடன், எந்த ஒரு பள்ளியும் மாணவர்களை தரவரிசைப் படுத்தி விளம்பரப் படுத்தக்கூடாது என்றும் அறிவித்தார். தர வரிசைப் படுத்துவதால் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் கடும் மன அழுத்தம் அடைவதாகவும், அதை தவிர்க்கவே இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருவதாகவும் கூறினார்.

 

s4

 

சேலம், நாமக்கல் போன்ற தனியார் சுயநிதி பள்ளிகளின் ஆதிக்கம் உள்ள மாவட்டங்களில் மாநில, மாவட்ட அளவில் அல்லது அந்தந்த பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளின் புகைப்படங்களை வெளியிட்டு விளம்பரம் செய்து, மாணவர் சேர்க்கை நடத்தி வந்தன. ரேங்க் முறை ஒழிப்பு குறித்த அறிவிப்பு, சுயநிதி பள்ளிகளுக்கு பேரிடியாக இறங்கியது.

அதேநேரம், இந்த அறிவிப்பின் மூலம் மாணவர்கள் தற்கொலை முடிவில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்று கல்வியாளர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர்.

 

இந்த உத்தரவை செயல்படுத்துவதில் அரசும், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கடந்த ஆண்டு கெடுபிடி காட்டியதால் தனியார் பள்ளிகள் சாதனை மாணவர்களைப் பற்றி விளம்பரம் செய்வதில் சற்று அடக்கி வாசித்தனர். அதையும் மீறி செயல்பட்ட பள்ளிகள் மீது பரவலாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

s3

 

ஆனால், இந்த ஆண்டு எந்த ஒரு தனியார் பள்ளியும் ரேங்க் முறை ஒழிப்பு குறித்த தமிழக அரசின் உத்தரவை கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளி வாயில் முன்பும், நகரின் முக்கிய பகுதிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளின் புகைப்படங்களுடன் பெரிய பெரிய விளம்பர பதாகைகளை வைத்து, மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறது.

இன்னும் சில சுயநிதி பள்ளிகள், எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் பத்திரிகைகளில் விளம்பரமாகவும், செய்தி வடிவிலும் சாதனை மாணவர்கள் குறித்து விளம்பரம் செய்து வருகிறது.

 

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் இயங்கி வரும் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் மேல்நிலைப்பள்ளி, விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலத்தில் செயல்படும் ஸ்ரீசுவாமி மேல்நிலைப்பள்ளி, செந்தில் பப்ளிக் பள்ளி உள்பட பல சுயநிதி பள்ளிகள் நகரின் முக்கிய இடங்களில் விளம்பர பதாகைகளை வைத்துள்ளன. இடைப்பாடி ஏஜிஎன் பள்ளி, சாதனை மாணவரை கவுரவிக்கும் புகைப்படத்துடன் செய்தி வடிவில் விளம்பரம் கொடுத்துள்ளது.

 

''தமிழக அரசின் உத்தரவை ஓராண்டு காலத்திற்குள்ளேயே தனியார் பள்ளிகள் நீர்த்துப் போகச் செய்துவிட்டன. ஓர் உத்தரவு, பட்டவர்த்தனமாக மீறப்படுவதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கல்வி அலுவலர்கள் கண்டுகொள்வதே இல்லை. பல தனியார் பள்ளிகளில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும், அரசுப்பள்ளி ஆசிரியர்களும் பங்குதாரர்களாக உள்ளனர். அதனால்தான் அரசின் எந்த ஒரு உத்தரவையும் தனியார் பள்ளிகள் கண்டுகொள்வதில்லை,'' என்கிறார்கள் கல்வியாளர்கள்.

 

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, தனியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கூறுகையில், ''மாணவர்களை மன உளைச்சலில் இருந்து தடுக்கத்தான் ரேங்க் முறை ஒழிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறினார். அந்த உத்தரவை மீறும் பள்ளிகள் மீது அரசு அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை அவர்தான் கண்காணிக்க வேண்டும். இந்த அரசு, பள்ளிக்கல்வி நிர்வாகத்தில் எப்போதும் முன்னுக்குப்பின் முரணாகத்தான் செயல்படுகிறது,'' என்றார்.

இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரியிடம் கேட்டபோது, ''ரேங்க் முறை ரத்து உத்தரவை பின்பற்றுமாறு ஒவ்வொரு பள்ளிக்கும் எஸ்எம்எஸ், இ&மெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளோம். சில தனியார் பள்ளிகள், பத்திரிகைகளில் விளம்பரம் செய்திருந்ததைப் பார்த்து நானே நேரில் அழைத்து எச்சரித்தேன்.

 

ஆனாலும், அதிலும் ஓட்டைகளைக் கண்டுபிடிக்கின்றனர். நாங்கள் முதல் மதிப்பெண் பற்றித்தான் குறிப்பிட்டோம். மாணவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றும், புகைப்படம் பிரசுரிக்கவில்லை என்றும் ஏதேதோ காரணம் சொல்கின்றனர்.

 

நாங்கள் இந்த ஒரு பிரச்னையை மட்டும் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. புதிய கல்வி அலுவலகம் அமைப்பதிலும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நியமிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். எந்த ஒரு தனியார் பள்ளியும் அரசு உத்தரவுக்கு பயப்படுவது மாதிரி தெரியவில்லை. கோடைக்காலத்தில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டாலும், அதையும் மீறுகின்றனர். என்னதான் பண்ணுவாங்க... அதையும் பார்ப்போம் என்ற தைரியத்தில் இருக்கின்றனர். ஒவ்வொருவரும் பின்புலங்கள் நிறைய வெச்சிருக்காங்க.

 

இந்த உத்தரவு, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று அரசு அறிவுறுத்த வேண்டும். எது இருந்தாலும் நானும் என் முயற்சிகளை கைவிடுவதாக இல்லை. இது தொடர்பாக யாராவது குறிப்பிட்டு புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

சார்ந்த செய்திகள்