ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். பிற்பகல் 3.30 மணிக்கு கோவை வரும் அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்கிறார்கள்.
இன்று இரவில் அவர் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை காலை 8.05 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு சூலூர் விமானப்படை தளத்துக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். அந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பகல் 11.45 மணிக்கு கோவை அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். மதிய உணவுக்கு பிறகு அவர் அங்கு தங்குகிறார்.
மாலை 4.40 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு கோவை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்துக்கு செல்கிறார். ஈஷாயோக மையத்தில் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார். மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை ஈஷா யோக மையம் மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள கோவில்களை அவர் பார்வையிடுகிறார். அதைத் தொடர்ந்து 112 அடி உயரம் உள்ள ஆதியோகி சிலை வளாகத்தில் செய்யப்பட்டுள்ள ஒளி-ஒலி காட்சியை அவர் தொடங்கிவைக்கிறார். பின்னர் மகா சிவராத்திரியையொட்டி ஈஷா யோக மைய நிறுவனர் சத்குருவின் ஞானம், தியானம், ஆனந்தம் என்ற நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் ஜனாதிபதி இரவு 7 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கார் மூலம் கோவை வருகிறார். இரவில் கோவையில் தங்குகிறார். நாளை மறுநாள்காலை 9.45 மணிக்கு கோவை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் அவர் டெல்லி திரும்புகிறார்.