திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த கடலாடி பழைய காலனியை சேர்ந்தவர் இளம்பெண் ஜெயக்கொடி. இவரை அதே ஊரை சேர்ந்த ராம்ராஜ் என்பவரின் காதல் வலைவீசியுள்ளான். இளம் மனம் என்பதால் இருவருக்குள்ளும் காதல் பற்றிக்கொண்டது. அது காமமாக மாறியது. திருமணத்துக்கு முன்பே கர்ப்பமானார் ஜெயக்கொடி.
நீ கர்ப்பமானது தெரிஞ்சா கல்யாணத்துக்கு வீட்ல ஒத்துக்கமாட்டாங்க எனச்சொல்லி கர்ப்பத்தை கலைத்துள்ளான், இப்படி இரண்டு முறை நடந்துள்ளது. மூன்றாவது முறை கர்ப்பத்தை கலைக்க முயன்றபோது, நான் கர்ப்பத்தை கலைக்கமாட்டன் என்னை திருமணம் செய்துகொள் என காதலனை வலியுறுத்தியுள்ளார். அவனோ முடியாது என மறுத்துள்ளான்.
இதனால் கடலாடி காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார் ஜெயக்கொடி. அதோடு, மாவட்ட சட்டப்பணிகள் குழு தலைவரான மாவட்ட நீதிபதி புகழேந்தியிடம் புகார் மனுவை தந்தார். அவர் அந்த இளம்பெண்ணோடு உடனே போளுர் வந்தார். கர்ப்பத்தை கலைத்ததாக கூறிய போளுர் நகரில் உள்ள அன்பு கிளினிக்கில் ஆய்வு நடத்தினார்.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி மகிழேந்தி, கருக்கலைப்புக்கான அனுமதி அரசிடம் பெறாமல் கருக்கலைப்பு செய்துள்ளார், இது சட்டவிரோதம், அதேப்போல் நோயாளிகள் வருகை குறித்த பதிவேடுகள் பராமரிக்கவில்லை, சட்டவிரோத கருக்கலைப்பு செய்ததை ஒப்புக்கொண்டார், நர்ஸிங் படிக்காத மாணவிகள் பணியில் இருந்தனர். இதனால் அவரை கைது செய்து விசாரிக்கச்சொல்லியுள்ளேன் என்றார்.
போளுர் போலிஸார் அவரை விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் இருந்தபோதே, எனக்கு நெஞ்சு வலிக்கிறது எனச்சொல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் சிறைக்கு செல்வதில் இருந்து தப்பித்துள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.