உரிமம் இல்லாமல் பொது நிகழ்ச்சி நடத்தியதாக கூறி கவிக்கோ அரங்கத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிஐடி நகரில் கவிக்கோ அரங்கத்தில் நேற்று மறக்க முடியுமா தூத்துக்குடியை என்ற தலைப்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், வழக்கறிஞர் அருள்மொழி, வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் வெள்ளையன், பேராசிரியர் அ.மார்க்ஸ், எஸ்.டி.பி.ஐ கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியதாவது, ரியல் எஸ்டேட் போல தமிழகம் மாறி வருகிறது. அனைத்து கட்சிகளும் ஒரே மாதிரியாகத்தான் செயல்படுகின்றன. மக்கள் அவர்களை வேண்டாம் என்று முடிவு எடுத்து பல காலங்கள் ஆகி விட்டது.
தூத்துக்குடியில் நடந்தவற்றையும், நடப்பவற்றையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். நாட்டு மக்களை அச்சத்தில் வைத்து இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் ஆகும். அப்படி பயமுறுத்தி வாழ்பவர்களின் முடிவு மோசமானதாக ஆகி விடும். என்னை போன்றோரின் குரல் மக்களுக்கு தேவை. கேள்வி கேட்பது நமது உரிமை. ஆனால் கேள்வி கேட்டால் நம் கையை எடுத்து நம்மை குத்துவார்கள் என தமிழக அரசு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இந்த நிலையில், நிகழ்ச்சி நடந்த கவிக்கோ அரங்கத்திற்கு உரிமம் இல்லை. உரிமம் இல்லாமல் பொது நிகழ்ச்சியை நடத்துவது குற்றம் என கூறி மயிலாப்பூர் போலீசார் கவிக்கோ அரங்கத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.