தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணுவிற்கும், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியனுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மோதல் அரசியல்வாதிகளையே மிஞ்சியிருக்கிறது.
தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார் அய்யாக்கண்ணு. அவர் விவசாயிகளுக்கான பிரச்சினைகளுக்காக பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார். அவர் நடத்திய போராட்டங்களில் உச்சபட்சமான போராட்டமாக அமைந்தது டெல்லி போராட்டம். அரைநிர்வாண போராட்டம், தரையில் உருண்டு போராட்டம், மனித மண்டையோடு போராட்டம், எலி கறி தின்னும் போராட்டம், மனித மலம் திண்ணும் போராட்டம் என மாதக்கணக்கில் போய்க்கொண்டிருந்த நிலையில் இறுதிக்கட்டமாக நிர்வாணமாக நடத்திய போராட்டம் பல சர்ச்சைகளை கிளப்பியது.
அந்தப் போராட்டத்தின் மூலம் உலகத்தையே திரும்பி பார்க்கவும் வைத்தார். இது தமிழக விவசாயிகள் மத்தியில் சில சர்ச்சைகளை கிளப்பினாலும், பல இடங்களில் வரவேற்பையும் பெற்றது. இளைஞர்களும், பொதுமக்களும், விவசாயிகளும் அவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இவ்வளவு பெரிய போராட்டங்கள் நடந்தும் பாஜக பிரதிநிதிகளோ, பிரதமர் மோடியோ, அமித்ஷாவோ விவசாயிகளை சந்திக்கவில்லை என்கிற கோபம் தமிழக விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் எழுந்தது.
இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மோடியை எதிர்த்து அவர் நிற்கும் தொகுதியில் போட்டியிடப் போவதாக அய்யாக்கண்ணு அறிவித்திருந்தார். இந்த சூழலில் யாரை எதிர்த்துப் போராடினாரோ, யாரை எதிர்த்து போட்டியிட சென்றாரோ அவரையே டெல்லியில் சந்தித்து தமிழக விவசாயிகளின் எரிச்சலை சம்பாதித்தார். பாஜக அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்தவர், "எங்களுக்குள் பேச்சுவார்த்தை முடிந்து விட்டது, அவர்களின் பேச்சு எங்களுக்கு மனநிறைவை தருகிறது" என்று பேட்டியும் அளித்தார்.
அதன்பிறகு அவருக்கு தமிழக விவசாயிகள் மத்தியில் அதிருப்திகள் வந்தபடியே இருந்தது, சிக்கல் மேல் சிக்கல் ஆரம்பமானது. சமூக வலைதளங்களில் அவரது படங்களை போட்டு வைரலாக்கி கிண்டலடித்து வருகின்றனர். பல தரப்பினரும் அவருக்கு எதிராகக் குரல் எழுப்பி கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணுவை வெளிப்படையாகவே எதிர்த்து கருத்துக்கூறி வந்தார். அதில் "தமிழர்களின் மானத்தை அய்யாக்கண்ணு பாரதிய ஜனதா கட்சியிடம் அடகு வைத்துவிட்டார், அவருக்கு பெரிய அளவில் செட்டில் ஆகிவிட்டது, அவரின் இந்த செயல் தமிழகத்திற்கும், தமிழக விவசாயிகளுக்கும் செய்யும் துரோகம்," என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை வெளிப்படையாகவே பேசிவருகிறார்.
ஒருவார காலமாக பொறுமைகாத்த அய்யாக்கண்ணு தற்போது வெகுண்டெழுந்து ,"பாண்டியன் தன்னைப் பற்றி அவதூறாக பேசி வருவது ஏற்புடையதாக இல்லை, அவர் மீது சட்ட ரீதியாக வழக்கு தொடுப்பேன்," என கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பத்திரிகையாளர்களுக்கு பேட்டியும் அளித்தார்.
அதில் "தன்னைப் பற்றி தவறான செய்திகளை பரப்பி வருகிறார் பாண்டியன். நான் சூட்கேஸ் வாங்கிவிட்டதாகவும், பாஜகவுடன் சமரசத்திற்கு சென்றுவிட்டதாகவும், விவசாயிகளை பாஜகவிடம் அடமானம் வைத்து விட்டதாகவும், ஆதாரமில்லாமல் அவதூறான செய்திகளை பரப்பி வருகிறார். என்னைப்பற்றி இனி பேசினால் அவரைப் பற்றிய பல தகவல்களை நான் வெளியிட நேரிடும். இதையே கடைசியாக வைத்துக்கொள்ளவேண்டும். என்னைப்பற்றி பேசியதற்கு மான நஷ்ட வழக்குத் தொடரப் போகிறேன். அதோடு மட்டுமல்லாமல் அவர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை டிஜிபியை சந்தித்து புகார் மனு கொடுக்கப் போகிறேன்." என்று கூறியிருக்கிறார்.
இது விவசாயிகள் மட்டத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. ஏற்கனவே அய்யாக்கண்ணு நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். அப்போது, பி. ஆர். பாண்டியன் நக்கலடித்து பேட்டி அளித்தார். பிறகு கமல்ஹாசனை பி.ஆர். பாண்டியன் சந்தித்ததும்ம் அய்யாகண்ணு அதற்கு பதிலடி கொடுக்கும்படியாக நக்கல் அடித்தார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் வசைபாடி வருவது வழக்கமாகவே இருந்தது. இந்த நிலையில் அய்யாக்கண்ணு, அமித்ஷாவை சந்தித்திருப்பது தமிழகத்தையை பேசவைத்துள்ளது. இருவரை பற்றியும் சமுக வலைதளங்களில் விவசாயிகளும், சமுக செயற்பாட்டாளர்களும் அவர்களின் கேளி சித்திரங்களை வைரலாக்கிவருகின்றனர்.