தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவுபெற்ற நிலையில் நாளை மறுநாள் வாக்குப்பதிவுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது தமிழகம்.
பரப்புரை முடிந்ததால் தொகுதியில் வாக்காளர்கள் இல்லாதவர்கள் வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பரப்புரை முடிந்த தேர்தல் தொடர்பான கூட்டம், ஊர்வலம் நடத்த கூடாது. சினிமா தியேட்டர் தொலைக்காட்சி சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரங்கள் வெளியிடக்கூடாது . சட்டமன்ற தொகுதிக்கு வெளியே இருந்து வரும் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும் என அறிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 1.58 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள தங்கும் விடுதிகளில் வெளியாட்கள் தங்கி உள்ளனரா என போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். எழும்பூர் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை திருவொற்றியூர், நந்தனம், திநகர், ராயபுரம் ஆகிய இடங்களில் இரவு ஒன்பது மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் இரவு 10.20 மணிக்கே மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி பணப்பட்டுவாடாவை நிகழ்த்தவே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.