சீன அதிபரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த 8 திபெத்தியர்களை அதிரடியாக கைது செய்தது தமிழக காவல்துறை.
அக்டோபர் 11- ஆம் தேதி மாமல்லபுரத்துக்கு வருகை தரும் சீன அதிபர் ஜின் பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசவுள்ளார். இந்நிலையில் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக காவல்துறை தீவிர செய்து வருகிறது. மேலும் இந்திய பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சீன அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள் சென்னையில் முகாமிட்டு அவ்வப்போது விமான நிலையம் மற்றும் மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல் காவல்துறையினருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே கிழக்கு தாம்பரத்தில் திபெத் கொடியுடன், சீன அதிபர் வருகை எதிர்ப்பு வாசகங்கள் எழுதுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அங்கிருந்த 2 மாணவர்கள், ஒரு பெண் உட்பட 8 திபெத்தியர்களை கைது செய்து விசாரித்தனர். இவர்களில் ஒருவர் சென்னை சென்னை பல்கலைக்கழக மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு பலத்த போலீஸ் பாதுகாப்போடு மருத்துவ பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் 8 பேரையும் ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி திவ்யா தயானந்த் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். 18-ந் தேதி வரை (11 நாட்கள்) அவர்களை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதனையடுத்து அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னையில் உள்ள திபெத்தியர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது காவல்துறை.