Skip to main content

“இந்திய அரசின் இந்துத்துவ சனாதனத்தை ஏற்காத தமிழினத்தை அழிப்பதுதான் குறிக்கோள்”- வேல்முருகன் அறிக்கை

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்து ஒரு வருடம் நிறைவடைய போகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் ஓராண்டு நினைவேந்தலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

velmurugan

 

 

“ ஸ்டெர்லைட் வேதாந்தா, வேதகால பாஜக, இவர்களின் அடிப்பொடி அதிமுக இணைந்து, தூத்துக்குடியில் இனப்படுகொலை நிகழ்த்திய நாள் 22.05.2018. அன்று காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில், மொத்தம் 17 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஆனால் அதனை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்றார், அந்தக் காவல்துறையைத் தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இப்போது இந்நிகழ்வின் ஓராண்டு நிறைவுறும் நிலையில், அதன் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கும் தடை விதித்திருக்கிறார்.
 

இந்தத் தடை துப்பாக்கிச் சூடு நடத்திய நாள் தொட்டே இருந்து வருகிறது. அந்நிகழ்வு தொடர்பாகப் பேசவோ, பொதுக்கூட்டம் நடத்தவோ, போராட்டம் நடத்தவோ ஓராண்டு காலமாகவே அனுமதியில்லை. அதல்லாமல், வழக்குப் போடப்பட்டு  ஆயிரக்கணக்கானோர் வதைக்கப்படுகிறார்கள். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தோர் மேலும் வழக்குப் போடப்பட்டிருக்கும் கொடூரம் வேறு. இவை அனைத்தும் பாசிச-சனாதன பாஜகவின் கட்டளைப்படியே அரங்கேறியிருக்கிறது.
 

தூத்துக்குடியில் நடந்தது தமிழினப்படுகொலை என நாம் குறிப்பிடுவதற்குக் காரணமுண்டு. ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சே, “இந்தியாவின் போரைத்தான் நடத்தினேன்” என்றான். இந்திய அரசின் இந்துத்துவ சனாதனத்தை ஏற்காத தமிழினத்தை அழிப்பதுதான் குறிக்கோள். ஆக, இந்துத்துவ சனாதனம், தன்னைத் தக்கவைத்துக் கொள்ள, தேசத் தந்தை காந்தி தொடங்கி இன்று வரை பயங்கரவாதச் செயல்களைத்தான் செய்துவருகிறது; பாபர் பள்ளிவாசல் தகர்ப்பும் இதில் அடக்கமே; பாதிரியார் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்களையும் சேர்த்து காரோடு எரித்துக் கொன்றதுவும் இதில் சேர்த்தியே.
 

 

 

ஏற்கனவே மே 17 தமிழீழ இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வை தடை செய்ததன் தொடர்ச்சியாகத்தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை நினைவேந்தலையும் தடை செய்திருக்கிறார்கள். இவ்விரு நிகழ்வுகளோடு, தமிழகத்தில் 116 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஸ்டெர்லைட் வேதாந்தாவுக்கு அனுமதி கொடுத்திருப்பதையும், இதில் முதல்வர் பழனிசாமி, “மக்கள் கருத்துக் கேட்பே தேவையில்லை” என தமிழக சுற்றுச்சூழல் விதியினையே திருத்தி, பிரதமர் மோடி மற்றும் அவரது நண்பர் ஸ்டெர்லைட் அதிபருக்கு உதவியிருப்பதையும் சேர்த்து மக்கள் கவனத்தினின்றும் திசைதிருப்ப, தந்திரோபாயத்திலும் ஈடுபட்டார்கள்.
 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுப் படுகொலை நினைவேந்தலுக்குத் தடை விதித்திருக்கும் நிலையில், அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டி தோழமைக் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறைகூவல் விடுக்கிறது!
 

 சனாதன பாஜக-அதிமுகவின் அரச பயங்கரவாதத்தை வேரறுப்போம், வாரீர் என அழைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்