திருச்சி, அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் அண்ணா நகர் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கேபிள் சேகர். முன்னாள் அதிமுக நிர்வாகி. இவரது மகன் முத்துக்குமார் (வயது 29). இவரது வீட்டையும் குமரன் தெருவில் மெத்தக்கடை அருகில் உள்ள பண்ணை வீட்டையும் அரியமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி சுந்தர்ராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி தெற்கு துணை ஆணையர் ஸ்ரீதேவி, பொன்மலை உதவியாளர் காமராஜ், வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஆய்வாளர் எட்வர்டு, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி, காவலர் ஜாகிர் உசேன், தடய அறிவியல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
.அப்போது ஒரு கிலோ எடை கொண்ட (ஆணி மற்றும் பால்ஸ் உள்ள வெடிகுண்டு) இரண்டு பால்ரஸ் வெடிகுண்டுகளை கைப்பற்றினர். அதனுடன் பட்டாசு வெடிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனைக்கு பின்னர் வெடிகுண்டுகள் குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக அரியமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுசீலா வழக்குப் பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக கீழ அம்பிகாபுரம் காவிரி நகரைச் சேர்ந்த சேகர் மகன் முத்துக்குமார், குட்ட பாலு, கணேசன் ஆகியோர் மீது வழக்குப் பதிவ்ய் செய்து அவர்களை தேடி வருகின்றனர். அதிமுக நிர்வாகியின் வீட்டில் வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் அண்ணா நகரைச் சேர்ந்த பெரியசாமி மனைவி பார்வதி கொடுத்த புகாரின் பேரில் முத்துக்குமார், சரவணன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.