தென்மாவட்டத்தில் நடக்கும் ஒவ்வொரு படு கொலையிலும் எப்படி சாதீயமும், அரசியலும் இருக்கின்றதோ, அந்த ஒவ்வொரு கொலையின் பின்னணியிலும் சாதீயம் பார்வைக் கொண்ட காவல்துறை அதிகாரி இருக்கின்றார்கள். அதுவும் காவல் துறையில் சாதீய நெட்வொர்க்கின் பலம் அதிக வீரியமாக உள்ளது என்பதும், தங்கள் சாதீக்கென தனித்தனியாக வாட்ஸ் அப் குரூப் வைத்துள்ளதும் தான் சமீபத்திய பதறவைக்கும் செய்தி.!
" எவ்வித விருப்பு, வெறுப்புக்கும் அடிபணியாமல் பணிபுரிவதே எங்களின் பணி.!" என ஆரம்பத்தில் சத்தியம் செய்த தமிழக காவல்துறையை முக்கிய அரசியல் தலைவர்கள், தங்களின் கைங்கர்யத்தால் அரசியல் போலீசாக மாற்றத் தொடங்க, சாதீத்தலைவர்களோ தங்களது சாதீயினராகத் தேடிப்பிடித்து சாதீப் போலீசாக மாற்றத் தொடங்கியிருக்கின்றனர். புதிதாக வேலைக்கு சேரும்பொழுதே, "இவன் நம்ம மணவாடு"..!!எனக் கூறி தங்களுக்கென உள்ள வாட்ஸ் அப் குழுவிலோ அல்லது முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலோ இணைந்து தங்களுடைய சாதீய நெட்வொர்க்கைப் பலப்படுத்துக்கின்றனர் இந்த காக்கிகள். இதில் கீழ் நிலைக்காவலர் மட்டுமல்ல.! உயரதிகாரிகளும் அடக்கம் என்பது தான் கொடுமையே.!
" அரசியலாக, மதமாக பிரிந்த காவல்துறையினர் இப்பொழுது சாதீயமாக பிரிந்திருப்பதும் வேதனைக்குரியதுதே.! ஆரம்பத்தில் பணியில் ஏதேனும் தவறு செய்து மாட்டிக்கொண்டால் தங்கள் இன அதிகாரிகளின் தயவினை நாட, உயர்அதிகாரிகளோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகின்றனர். சாதிப்பின்புலம் மற்றும் அரசியல் தொடர்புகளால் தங்களுக்கு சாதகமான ஊர்களிலும் ஸ்டேஷன்களிலும் பல ஆண்டுகளாகவே மாறுதல் இல்லாமல் பணியை தொடர முடிகிறது. அவர்களால் இவர்களை பற்றிய நேர்மையான உளவுத்துறை அதிகாரிகள் ரிப்போர்ட் அனுப்பினால், அந்த ரிப்போர்ட்டின் நகல்கள் இவர்களின் கைகளுக்கு வந்து விடுகின்றன. இதனால் இவர்களை பற்றிய தகவல்களை மேலே அனுப்புவதற்கே, சில அதிகாரிகள் தயங்குகின்றனர். தங்களுக்கு வேண்டாத உயர் அதிகாரி பற்றி இவர்கள் எழுதும் மொட்டை மனுக்களுக்கும் அளவில்லை. அதிகாரிகளை சில சம்பவங்களில் எக்குத்தப்பாக மாட்டிவிடவும் இவர்கள் தயங்குவதில்லை. டிரைவர்கள், ஸ்டேஷன் ரைட்டர்கள், கேம்ப் க்ளார்க்குகள் என்று சற்று பலம் வாய்ந்த பதவிகளை கெட்டியாக பிடித்துக் கொள்ளும் இவர்கள், அங்கிருந்து கிடைக்கும் தகவல்களை தங்கள் சாதீ சார்ந்தவர்களுக்கு உடனடியாக பாஸ் செய்து விடுவதால், உயர் அதிகாரிகள் திணறுகிறார்கள். அரசு நினைத்தால் மாத்திரமே இதனை சீர் செய்ய முடியும். இல்லையெனில் சாதீக்காக போலீஸ் ஸ்டேஷன்களே உருவாகலாம்" என்கிறார் சாதீயால் பாதிக்கப்பட்ட உளவு அதிகாரி ஒருவர்.