கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த தெ.வ.புத்தூர் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அக்கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது மனைவி அஞ்சுகம் மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் ரமேஷ் வீட்டில் அமைந்துள்ள ஊராட்சிக்குட்பட்ட குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து உள்ளார்.
அத்தண்ணீரை பயன்படுத்தி தனது 4 குழந்தைகளுக்கும், பக்கத்து வீட்டு உறவினர்களின் குழந்தைகளுக்கும் தேநீர் செய்து கொடுத்துள்ளார். அப்போது குழந்தைகள் தேநீரில் ஒரு விதமான வாசனை வருகிறது என்று தாயிடம் கூறியுள்ளனர். ஆனால் அதை அவர் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்துள்ளார். பின்னர் பள்ளிக்கு சென்ற ரமேஷ் மற்றும் அவரது குழந்தைகள், உறவினர்கள் குழந்தைகள் 7 பேர் பள்ளியில் மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளனர்.
இதனைக்கண்ட ஆசிரியர்கள் காவல்துறைக்கும், அவசர ஊர்திக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தைகளை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் அக்குழந்தைகளின் தாயாரும் மயங்கிய நிலையில் இருந்ததால் அவரும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் ரமேஷ் குடும்பத்தினர்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாயில் மட்டும், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் குருணை மருந்தை மர்ம நபர்கள் வைத்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் இச்சதி செயலில் ஈடுப்பட்டவர்கள் யார் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுகாதர ஆய்வாளர்கள் பள்ளிக்கு சென்று மற்ற குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் ஊராட்சி குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யும் வரை, பொதுமக்கள் அனைவரும் தண்ணீர் பிடிக்க கூடாது என்று தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரப்பரப்பு நிலவுகிறது. இப்பரப்பரப்பால் பீதியடைந்த அப்பகுதி பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளையும் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனை செய்ததால் பீதி பரவியது.