திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக அரசு சார்பில் மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 2.61 ஏக்கர் நிலத்தில், 2,22,815 சதுர அடி பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ கட்டப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்குத் திறந்து வைக்க உள்ளார். இதற்காக இன்று பகல் 11.30 மணி அளவில் விமானத்தில் மதுரை செல்லும் முதல்வர் ஸ்டாலின், அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டுப் பின்பு விழா நடைபெறும் இடத்திற்குச் செல்கிறார். மாலை கலைஞர் நூலகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வு முடிந்து, போலீஸ் ரிசர்வ் லைன் மைதானத்தில் கலைஞர் நூலகத் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கலைஞர் நூலகம் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“மதுரையில் திறக்கப்பெறும்
கலைஞர் நூற்றாண்டு நூலகம்
கலைஞரின் மாட்சிக்கும்
தளபதியின் ஆட்சிக்கும்
வரலாற்று அடையாளமாகும்
தமிழச் சாதியை
அறிவுக் குடிமக்களாக்கி
இந்த ஏழு தளங்களும்
ஏழு கண்டங்களுக்கும்
இட்டுச்செல்க என்று
வாழ்த்துகிறோம்
தமிழ்நாடு கர்வப்படும்
காரணங்களுள்
இதுவும் ஒன்று” எனக் குறிப்பிட்டுள்ளார்.