Skip to main content

ரம்ஜானை முன்னிட்டு இரவு 9 மணி வரை துணிக்கடைகள் இயங்க அனுமதி –வேலூர் ஆட்சியர் உத்தரவு

Published on 24/05/2020 | Edited on 25/05/2020

 

Clothes shops


ரம்ஜான் பண்டிகைக்காக ஒரு மாதம் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருப்பர். ஒரு மாத நோன்புக்குப் பின் வரும் வளர்பிறையின் மூன்றாவது நாள் வானத்தில் நிலவைப் பார்த்தபின் ரம்ஜானை கொண்டாடுவார்கள்.
 


கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை காலத்தில் தான் ரம்ஜான் நோன்பும் துவங்கியது. நோன்பு காலத்தில் இஸ்லாமிய மக்கள், மசூதிக்குச் சென்று தொழுகை நடத்துவார்கள். தடை காலமாக இருந்ததால் இஸ்லாமிய மக்களால் மசூதிக்குச் செல்ல முடியவில்லை. அவரவர் இருக்கும் இடத்திலேயே தொழுகை நடத்திக்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு இந்தியாவில் மே 25ஆம் தேதி ரம்ஜான் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மக்களிடம் பெரிய அளவில் பணப்புழக்கம் இல்லாததால் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையினர், பண்டிகைக்கான புதிய துணிகள் எதுவும் எடுக்கவில்லை.


எடுக்க விரும்பிய சிலருக்கும் துணிக்கடைகள் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் இதுப்பற்றி வேலூர் மாவட்ட வியாபாரிகளுக்கு ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகசுந்தரம். அதாவது, மே 24 மற்றும் 25ஆம் தேதி இரவு என இரண்டு தினங்களுக்கு இரவு 9 மணி வரை துணிக்கடைகள் இயங்க அனுமதி அளித்துள்ளார். ஏ.சி. வசதியுள்ள துணிக்கடைகள் ஏ.சி.யை இயக்கக்கூடாது என்கிற உத்தரவோடு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 


இந்த அறிவிப்பு வியாபாரிகளை விட இஸ்லாமிய மக்களைப் பெரிதும் மகிழ்ச்சிக்கொள்ள வைத்துள்ளது. வேலூர், குடியாத்தம், பள்ளிக்கொண்டா பகுதிகளில் இஸ்லாமிய மக்கள் கணிசமாக வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்