ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பகுதியில் மேலும் ஒரு டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் சிலமாதங்களாக நடந்து வந்தது. இந்த புதிய டாஸ்மாக் கடைக்கு இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என்று கலெக்டர் அலுவலகத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தி்லும் மக்கள் மனு கொடுத்தனர்.
இந்நிலையில் இந்த பகுதியில் கட்டப்பட்டு வந்த டாஸ்மாக் கடை பணிகள் முடிந்து இன்று திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதை அறிந்த அப்பகுதி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் திமுக நாம் தமிழர் உட்பட பல்வேறு கட்சியை சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டுவருகிறது. அதில் ஒரு டாஸ்மாக் கடையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு ஒரு ரவுடி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதனால் இந்த பகுதியை கடக்கவே இப்பகுதியில் பெண்கள் அச்சமடைந்து வருகின்றனர். இந்த அரசாங்கத்திற்கு வருவாய் வேண்டும் என்பதற்காக எங்கள் தாலியயா அறுப்பது? இது போதாதுனு மேலும் ஒரு டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வரக்கூடிய டாஸ்மாக் கடையை சுற்றி ஆஸ்பத்திரி, பள்ளிகள் உள்ளது. இதனால் நோயாளிகள் குழந்தைகள் அச்சமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே உடனடியாக இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.
அந்தப் பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் கருங்கல்பாளையம் போலீசார் பாதுகாப்புக்காக இரவிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.