புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல ஊர்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதே போல தான் புதுக்கோட்டை தொகுதி பெருங்களூர் ஊராட்சி சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மதியம் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கன மழையால் காட்டுப் பகுதியில் சேர்ந்த மழைத் தண்ணீர் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. இதில் பெருங்களூர் - காட்டுப்பட்டி சாலையில் 19 கிராமங்களுக்குச் செல்லும் பிரதான சாலையில் உள்ள தரைப்பாலத்தை மறைத்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் காலையில் வெளியே வேலைக்குச் சென்றவர்கள் மாலை வீட்டிற்குத் திரும்ப முடியாமல் தவித்தனர். அதேபோன்று பள்ளி மாணவ மாணவிகளும் வீடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர். இதனைப் பார்த்த இளைஞர்கள் பள்ளி மாணவ, மாணவிகளில் சைக்கிள்களை பாதுகாப்பாக தூக்கிக் கொண்டு அவர்களையும் பாதுகாப்பாக அழைத்து வந்து கரை சேர்த்தனர்.
இது குறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறும் போது, “இந்த தரைப் பாலம் வழியாகத் தான் பெருங்களூரில் இருந்து கீரனூர் வரை பேருந்து முதல் அனைத்து வாகனங்களும் செல்லும் 19 கிராமங்களுக்கு செல்லும் சாலையாக உள்ளது. ஒவ்வொரு மழைக் காலத்திலும் இப்படித்தான் தரைப்பாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அப்போது போக்குவரத்தும் தடைபடும். அதனால் பாலம் கட்டனும் என்று பல முறை கோரிக்கை வச்சோம். 2021 ல் அமைச்சர் ரகுபதி அப்போதைய மாவட்ட ஆட்சியர் உள்பட பலர் நேரில் வந்து பார்த்துட்டு விரைவில் பாலம் கட்டுவோம்னு சொன்னாங்க இன்னும் கட்டல.
அதே போல 2021 ல் இந்த சாலையை கிராமச் சாலைகள் திட்டத்தில் சீரமைக்கும் போது எஸ்டிமேட்டில் பாலம் அமைக்க சேர்க்கச் சொன்னதுக்கு அதையும் சேர்க்காமல் சாலை வேலையை முடித்து நெடுஞ்சாலைத்துறையிடம் கொடுத்துட்டாங்க. இனி 5 வருடங்களுக்கு பாலம் கட்ட எஸ்டிமேட் போட முடியாதுன்னு சொல்றாங்க. அதனால பாலம் இல்லாம எங்கள் 19 கிராம மக்கள் தவிக்கத் தான் வேண்டுமா? தமிழ்நாடு அரசும் அதிகாரிகளும் சிறப்பு ஏற்பாடு செய்து விரைவாக பாலம் கட்டிக் கொடுத்தால் மக்கள் பயனடைவார்கள். இல்லை என்றால் இன்னும் சில மழையில் சாலையே உடைந்து போக்குவரத்தே முழுமையாக துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது” என்கின்றனர்.