தேனி அருகே பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள பகுதியை இன்று (16.07.2019) அப்பகுதி விவசாயிகளோடு சந்திக்க சென்ற தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், உலகத்திலேயே பழமையானதும், இமயமலை உருவாகுவதற்கு முன் உருவான மலை என்கிற சிறப்பு பெற்ற அப்பர் மலையை அழித்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதை ஏற்க முடியாது. தமிழகத்தில் தென்மேற்கு, வடகிழக்கு ஆகிய இரு மழைகளை உருவாக்கி தருவது அப்பர் மலையை ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை தான்.
இத்திட்டத்தால் தமிழகம் பருவ மழையை இழக்கக்கூடிய பேராபத்து ஏற்படும். இதனால் தமிழகம் பேரழிவை சந்திக்கும் ஆபத்து உள்ளதால் ஒட்டு மொத்த தமிழக மக்களும் போராட்டக்களத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பேரழிவுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்குகிற போது தமிழக அரசின் நிலையை தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் தெளிவு படுத்த மறுப்பது ஏன்? மரபைக்கூட பின்பற்ற மறுப்பது நியாயமில்லை. சாதக பாதகம் குறித்து தெளிவுப்படுத்த வேண்டும்.
உலகத்தில் இதுவரையில் ஆறு நாடுகளில் பூமிக்கடியில் பாலைவனப் பகுதிகளில்தான் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் மட்டும் தான் சிறப்பு பெற்ற மலையில் குடியிருப்புப் பகுதியில் நிறைவேற்றப்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக இதை கைவிட வேண்டும். இல்லையேல் தமிழகம் போராட்ட களமாக மாறும் என எச்சரிக்கிறேன் என்றார்.