தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
நேற்று இரவு முதல் தற்பொழுது வரை தொடர்ச்சியாக தூத்துக்குடியில் விட்டுவிட்டு பல பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது. இதனால் தூத்துக்குடியில் தாழ்வான பகுதிகளில் நீர்தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தோணியார் கோவில் பகுதியில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்து காணப்படுகிறது.
இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய ஆறு மாவட்டங்களில் நள்ளிரவு ஒரு மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.