
கருப்பு பண சட்டத்தின் கீழ் வெளிநாட்டில் சொத்து வாங்கிய வழக்கில், ப.சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்ஸ்ட் 20ம் தேதி நேரில் ஆஜராக சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். இவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சொத்துகள் வாங்கியுள்ளதாகவும், இந்த சொத்துகள் வாங்கிய விவரங்களை நளினி சிதம்பரம் உள்பட 3 பேரும், தங்களது வருமான வரிக்கணக்கில் காட்டவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவரும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015 ஆம் ஆண்டு கருப்பு பண தடுப்புச்சட்டத்தை கொண்டு வந்தார். இந்த சட்டத்தின் கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமான வரித்துறை குற்றம் சாட்டியது.
அதாவது, இங்கிலாந்து நாட்டில், 5.37 கோடி ரூபாய் மற்றும் 80 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட 2 சொத்துகளும், அமெரிக்காவில் 3.28 ரூபாய் கோடி மதிப்புள்ள சொத்தும் வாங்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்டு அவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு நளினி சிதம்பரம் உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர்.
ஆனால் இருந்தபோதிலும் கருப்பு பண தடுப்புச்சட்டத்தின் கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக புகார் மனுவை சென்னை எழும்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், வருமான வரித்துறை தாக்கல் செய்தது. இந்த புகார் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர்விழி, குற்றம்சாட்டப்பட்ட நளினி சிதம்பரம் உள்ளிட்ட 3 பேரும் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரனைக்கு வந்தது, ஆனால் நளினி சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை. இதன் பின் உத்தரவிட்ட நீதிபதி வரும் ஆகஸ்ட் மாதம் 3 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.